பக்கம்:கைதி எண் 6342.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

விடுவித்துக் கொள்ளுங்கள்" என்றார். அவ்வளவுதான் அவர் கூறமுடியும். நமக்கு உள்ள நிர்வாக முறை, அவ்வளவுக்குத்தான் இடம் அளிக்கிறது. ஏராளமான பொருட் செலவிலே, துப்பறியும் துறை, தகவல் சேகரிக்கும் துறை பணிபுரிகிறது. கழகத் தோழர்கள் எவரெவர்? எவரெவர் கிளர்ச்சியில் ஈடுபடப் போகிறவர்கள்? எப்போ? என்பது அத்தனையும் துரைத்தனம் நன்கு அறியும். நாமும் எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிவிக்கிறோம், என்றாலும், போலீஸ் துறையினருக்கென்று அமைந்துவிட்டுள்ள வேலைமுறை, உறவினராயினும் விடாதே, உடன்வந்தவர் என்றால், கிளர்ச்சிக்காரராகத்தான் இருப்பார்! என்று கட்டளை பிறப்பிக்கிறது. அதன்படி காரியம் நடக்கிறது. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, கமிஷனர் அலுவல்கத்திலேதான், பேரளத்தாருக்கு 'விடுதலை' கிடைத்தது. எனக்குச் சம்பந்தி ஆனதற்குக் கிடைத்த சன்மானமா இது என்று எண்ணி, எங்கே சங்கடப்படுகிறாரோ என்று நான் எண்ணிக்கொண்டேன். ஆனால், அவர், வருத்தமோ கலக்கமோ கொள்ளவில்லை. அதைக் கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. பிறகு சைதாப்பேட்டை சப்-ஜெயிலுக்கும் வந்திருந்தார். அப்போது எனக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது. மெத்தச் சிரமப்பட்டு, சிரிப்பை அடக்கிக்கொண்டேன். காஞ்சிபுரத்திலேயே என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்று வதந்தி உலவியபோது, என்னுடைய இளைய மருமகள், பேரளத்தாரின் மகள், விஜயா, என் மனைவியிடம், "மாமி! முதலமைச்சர் பக்தவச்சலம் எங்கள் குடும்பத்துக்கு ரொம்பத் தெரிந்தவர், வேண்டியவர். நான் போய்க் கேட்கட்டுமா அவரை, ஏன் என் மாமனாரைக் கைது செய்ய எண்ணுகிறீர் என்று" எனக் கூறியதாக, ராணி என்னிடம் சொன்ன நினைவு வந்தது. என்னைக் கைது செய்ய வேண்டாமென்று முதலமைச்சர் பக்தவத்சலத்திடம் சிபார்சு செய்ய விரும்பிய விஜயாவுக்கு, பாபம், தன்னுடைய தகப்பனாரையே பக்தவத்சலத்தின் அரசாங்கம் இந்தப்பாடு படுத்திவிட்டதைக் கேள்விப் பட்டபோது, முகம் எப்படி ஆகி இருந்திருக்கும்! நான் தான் உள்ளே இருந்தேனே, பார்க்க முடியவில்லை; ஆனால் யூகித்துக் கொள்ள முடிகிறதல்லவா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/16&oldid=1650625" இலிருந்து மீள்விக்கப்பட்டது