பக்கம்:கைதி எண் 6342.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

தெரிவித்துவிட்டு, ஒரு அறப்போர் நடத்த முன்வந்த எங்கள் விஷயத்திலா கையாள்வது! ஒரு காரணம், அவசியம், பொருள், பொருத்தம், இருக்கவேண்டாமா! இப்படி இயங்குகிறது ஒரு அரசு. இந்தவிதமாக நடத்தப் படுகிறார்கள், பொதுவாழ்க்கையில் பணி புரிபவர்கள்—அதிலும் சுயராஜ்ய காலத்தில்!!

அந்தந்த ஊர் போலீஸ் அல்லது சிறைக் கொட்டடியில் உள்ளவர்கள், என்ன எண்ணிக் கொள்வார்கள், என்ன பேசிக்கொள்வார்கள், இப்படி தனித்தனியே, கொண்டுவந்து அடைத்ததுபற்றி?

'பெரிய பக்காத் திருடன்போல இருக்கிறது. அதனால்தான் இவனை இவனுடைய கூட்டாளிகளிடமிருந்து பிரித்துத் தனியாகக் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள்' என்று பேசிக்கொள்வார்கள். இதிலே, போலீசுத் துறைக்குக் கிடைக்கும் கீர்த்தி என்னவோ, இலாபம் என்னவோ, சுவை என்னவோ, எனக்குப் புரியவில்லை!

அடையாறு போலீஸ் கொட்டடி போய்ச் சேருகிறவரையில், எனக்கு எங்கேபோகிறோம் என்பது தெரியாது. அதிகாரியை நான் கேட்கவுமில்லை. இரண்டு நாள் கழித்துத்தான், மற்ற நால்வர் சென்ற இடங்களும் எனக்குத் தெரிய வந்தன.

அடையாறு போலீஸ் கொட்டடியும் எனக்கு முன்பே பழக்கமான இடம்தான்—1957 ல் ஒரு இரவு, நமது நண்பர்களுடன் அடைக்கப்பட்டிருந்தேன். என்னை அழைத்துக் கொண்டுவந்த துணைக் கமிஷனர் உத்தரவிட்டார், எனக்குச் சாப்பாடு கொண்டுவரச் சொல்லி. சாப்பாடு முடிகிறவரையில், மிக இயற்கையாகவே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு துணைக் கமிஷனர் சென்றுவிட்டார். போலீஸ் நிலைய அதிகாரிகள், மெல்லிய குரலில் 'லாக்-அப்' என்றார்கள். பகல் 1 மணிக்கு! கைதி! லாக்-அப்பில்தானே போட்டாக வேண்டும். அதுதானே அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விதிமுறை! கைதி என்றால் எல்லோரும் ஒன்று! அதிலே தராதரம் பார்க்கத் தேவையில்லையா! அரசியல் கிளர்ச்சி காரணமாகக் கைது செய்யப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/19&oldid=1572402" இலிருந்து மீள்விக்கப்பட்டது