பக்கம்:கைதி எண் 6342.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

தம்பி! நமக்கு இருப்பதைவிட இத்தகைய அதிகாரிகளுக்குச் சங்கடம் அதிகம்—அதனை உணர்ந்திருக்கிறாயோ இல்லையோ, தெரியவில்லை.

பொதுவாகவே, ஏற்பட்டுவிடும் உணர்ச்சிகளைப் பேச்சினால், வெளியே கொட்டிவிட்டால்தான், மனதுக்கு ஒரு நிம்மதி—பெரிய பாரத்தைக் கீழே இறக்கிவிட்ட போது ஏற்படும் நிம்மதி—உண்டாகும். உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி வெளியே காட்ட முடியாமல், மனதுக்குள்ளேயே போட்டு அடைத்து வைத்திருந்தால், மனம், சுமையினாலே பாதிக்கப்பட்டுவிடும். வேதனை அதிகமாகி விடும்.

நாம் நமது உணர்ச்சிகளைப் பேசி வெளிப்படுத்துகிறோம்—பாரம் குறைகிறது—மனதுக்குச் சுமை இல்லை.

இந்த அதிகாரிகள் என்ன செய்வார்கள்? நெஞ்சில் இருப்பதை நாவுக்குக் கொண்டுவர முடியாது தத்தளிக்கிறார்கள். என்னை மட்டுமா அவர்கள் 'லாக்-அப்' செய்தார்கள்? தங்களுக்கு இயற்கையாகத் தோன்றக்கூடிய பரிவு, பச்சாதாப உணர்ச்சி, எல்லாவற்றையும் சேர்த்துதிதான் 'லாக்-அப்' செய்துவிடுகிறார்கள்!!

இவ்விதமே செய்து செய்து, சில காலத்திற்குப் பிறகு, அத்தகையவர்கள், உணர்ச்சிகள் எளிதிலே எழமுடியாத 'மனம்' பெற்று விடுகின்றனர்.

போலீஸ் அதிகாரிகள், 'பிடிபட்ட'வர்கள், தங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள். ஆணைக்கு அடங்க மறுத்தவர்கள் வம்புதும்பு பேசுபவர்கள் என்ற வகையினராக இருந்தாலாவது, கோபம் கொண்டு, அமுல் நடத்த வசதி ஏற்படும். "பயல் பத்து நாட்களாகச் சிக்காமல் ஏமாற்றிக் கொண்டிருந்தான்; பிடிக்கச் சென்ற கான்ஸ்டபிளுடைய கையைக் கடித்துவிட்டான்; எவனும் தனக்கு நிகர் இல்லை என்ற விதமாகப் பேசுகிறான்"—என்று கூறி, கோபத்தைக் காட்டலாம். என் போன்றாரிடம், அவர்களுக்குக் கோபம் ஏற்பட ஒரு காரணமும் கிடையாதே! ஆகவே, கோப-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/21&oldid=1572404" இலிருந்து மீள்விக்கப்பட்டது