பக்கம்:கைதி எண் 6342.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

மற்றத் தடவைகளை விட, இம்முறை தொத்தா, மனதிலே இயற்கையாக ஏற்படக்கூடிய சங்கடத்தை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, மிகக் கலகலப்பாக இருந்து, என்னை காஞ்சிபுரத்திலிருந்து வழி அனுப்பி வைத்தது, என் உள்ளத்துக்குப் புதியதோர் எழுச்சியைத் தெம்பைக் கொடுத்தது. நல்ல காரியத்துக்காகப் பணியாற்றுகிறான் மகன் என்ற பெருமிதம், அவர்களின் கண்ணொளியிலே கண்டேன். என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்டவர்கள் முதுமையால் நலிவுற்று இருக்கும் நாட்களில் நான் இங்கு வந்திருக்கிறேன். என் துணைவி ராணி, இம்முறை சிறையிலே என்னை வந்து பார்த்தபோது, கண்களில் நீர் துளிர்த்தது கண்டு, மிகவும் சங்கடப்பட்டேன். வயதான இருவருக்கும், தைரியம் கூறிக்கொண்டிருக்கும் பொறுப்பு உனக்கு, நீயே இப்படி இருக்கலாமா? என்று கேட்க விரும்பினேன்—ஆனால், நான் மனைவி மக்களுடன், பேசிக் கொண்டிருக்க அனுமதி கிடைத்ததே தவிர, எங்களுடன், இரண்டு சிறை 'சூப்பரிண்டுகள்' ஒரு ஜெயிலர், மற்றோர் அதிகாரி, இவ்வளவு பேர்கள் இருந்தார்கள். என் மூத்த மருமகப் பெண் சரோஜா இத்தகைய இடம் பற்றி, புத்தகத்தில்தான் படித்திருக்க முடியும்—எனக்கு மருமகப் பெண்ணாக வந்த பலன்—சிறையையும் வந்து பார்த்தாகி விட்டது. மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பரிமளமும், அச்சகப் பொறுப்பையும் பரிமளம் பதிப்பக வேலையையும் கவனித்துக் கொள்ளும் இளங்கோவனும், உடன்வந்தனர். ஒவ்வொரு நாளும், நண்பர்கள் வருகின்றனர்—ஆனால் வழக்கு முடிந்து தண்டனை என்று ஆகிவிட்ட பிறகு, இப்படி அடிக்கடி வரமுடியாது—பத்து நாட்களுக்கு ஒருமுறை தான் பார்க்க முடியும். அந்தப் பழக்கம் கவனத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, ராணி, என்னை உடனடியாகச் சைதாபேட்டை சிறையில் வந்து பார்க்க விரும்பியபோது "வேண்டாம் ஒருவாரம் போகட்டும்" என்று சொல்லி அனுப்பினேன். பல சொல்லிப் பயன் என்ன! பொது வாழ்க்கைத்துறையில் முழுக்க முழுக்க என்னை ஒப்படைத்து விட்டேன் என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி என் குடும்பத்தினர் தங்களுடைய நினைப்புகளைச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டியது தான்! வேறு முறை இல்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/27&oldid=1572772" இலிருந்து மீள்விக்கப்பட்டது