பக்கம்:கைதி எண் 6342.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

சைதைச் சிறைக்கு நான் வந்து சேர்ந்ததும், நண்பர் இராகவானந்தத்தின் மூலம், பல வசதிகளைப் பெற முடிந்தது. என்னுடைய தலைமையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கலப்புத் திருமணம் செய்து கொண்ட ராமச்சந்திரன் எனும் தோழர், ரயில்வே துறையில் பணியாற்றி வருபவர், சைதையிலிருந்து கொண்டு என்னுடைய தேவைகளைக் கவனித்துக் கொண்டார்.

சைதைச் சிறையில் நான் இருப்பதை அறிந்து கொண்ட கருணாநிதி, நாவலர், அன்பில் ஆகியோர் அங்கு வந்தபோதுதான், காஞ்சிபுரத்திலிருந்து நான் புறப்பட்ட போது, வேறு வண்டியில் கிளம்பி வந்து கொண்டிருந்த நண்பர்கள் நடராசன்—கோவிந்தசாமி ஆகியோரும் 'பிடி பட்டார்கள்'—சென்னைச் சிறையில் அடைபட்டார்கள். என்ற செய்தி தெரியவந்தது. மூலைக்கு மூலை வலைவீசி, ஊருக்குஊர் திட்டமிட்டு, கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு வருகிற செய்தி கேள்விப்பட்டேன். இவ்வளவு 'மதிப்பு' அளிக்கமாட்டார்கள், தி. மு. க. கிளர்ச்சி தன்னாலே மங்கிவிடச் செய்வார்கள் என்று கொண்ட அரசியல் அப்பாவிகளை எண்ணிச் சிரித்துக் கொண்டேன். தம்பி! அறப்போர் துவக்கமே செய்யப்படவில்லை; அதற்குள் தமிழகத்தில் 2000 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையிலிருந்து நெல்லைவரை, சேலத்திலிருந்து செங்குன்றம் வரை, கைது செய்யும் படலம்! பெரிய நகரம் மட்டுமல்ல, சிற்றூர்களிலும்! கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஒருமுறை நீயே தயாரித்துப் படித்துப்பார், தம்பி! கழகம் எவ்வளவு உயிரோட்டம் உள்ள அமைப்பாக இருக்கிறது என்பது புரியும்; உன் உழைப்பின் பலன் வீண்போகவில்லை என்பது விளங்கும். எத்தனை வழக்கறிஞர்கள்! எத்தனை பட்டதாரிகள்! பஞ்சாயத்துத் தலைவர்கள்! நகராட்சி மன்றத் தலைவர்! சட்டமன்ற உறுப்பினர்கள்! கண்ணியமான வாழ்க்கை நடத்துபவர்கள்! கிராமத்தில் பெரிய குடும்பத்தினர்! மளமளவென்று நாலுநாட்களில் 2000! இத்தனைக்கும், இந்தப் பட்டியலில் நாவலரும், கருணாநிதியும், மதியும், மனோகரனும், அன்பழகனும், ராஜாராமும், செழியனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/28&oldid=1572773" இலிருந்து மீள்விக்கப்பட்டது