பக்கம்:கைதி எண் 6342.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

ஏறினோம்—நால்வரையும், சென்னைச் சிறைக்கே கொண்டு போகும்படி வழக்கு மன்றத் தலைவர் உத்திரவிட்டிருந்தார். அப்பாடா! என்ற ஒரு நிம்மதி எங்கள் ஐவர் பார்வையிலும். ஆனால், அந்த நிம்மதி எதுவரையில் இருந்தது தெரியுமா, தம்பி! சிறை நுழைகிறவரையில், சிறைக்குள்ளே சென்றதும் நான் பழயபடி, 5-ம் நம்பர் அறையில், தனியனாக! அந்த நால்வர் சிறையில் வேறோர் பகுதியில்! இது என்ன ஏற்பாடோ? ஏன் இந்த ஏற்பாடோ? புரியவே இல்லை. 16-ந் தேதியிலிருந்து அவர்களை நான் காணவில்லை. பேச நிரம்ப ஆவல். சிறையிலே எதைப் பேசி, என்ன திட்டம் போட்டு, இந்தச் சர்க்காருக்கு என்ன சங்கடத்தை நாங்கள் ஏற்படுத்திவிடப் போகிறோம்? எதற்காக இப்படிப்பிரித்துப் பிரித்து வைக்கவேண்டுமோ? தெரியவில்லை!

சரி, எனக்கு அந்த ஒரு பழக்கம். தனியனாக இருக்கும் பழக்கம்—இதுவரையில் ஏற்பட்டதில்லை; எப்போதும் நாலு பேருக்கு நடுவிலேயே இருப்பது வாடிக்கை. "அதென்ன கெட்ட பழக்கம்—தனியாக இருந்து பழகிக்கொள்" என்று சர்க்கார் எனக்குப் போதிக்கிறது போலும். நன்றி! மகிழ்ச்சி இல்லை! நன்றி!

இன்றுதான் மேயர் தேர்தல். இதைப்பற்றி வழக்கு மன்றத்தில் வந்திருந்த நண்பர்களிடம் பேச எண்ணினேன்—முடியவில்லை. நிலைமை சாதகமாக இல்லை என்பதை, கம்யூனிஸ்டுக் கட்சி காங்கிரசுக்கு ஓட்டு அளிக்க முடிவு செய்துவிட்டது பற்றிய செய்தியே காட்டுகிறது. கிருஷ்ணமூர்த்தி நல்லவர், நமது கழகம் அல்ல—ஆனாலும் பண்புள்ளவர்; பழகுவதற்கு ஏற்ற பெரிய மனிதர், இதனை விளக்கி, இவருக்கே ஆதரவு அளிக்கும்படி, 14-ந் தேதியே ஒரு அறிக்கை எழுதி, மாநகராட்சி மன்ற தி.மு.க.தலைவர் அ.பொ. அரசு அவர்களிடம் கொடுக்கச் செய்திருந்தேன். இடையிலே என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்ற முன்னாள் மேயர் முனுசாமியும், முன்னாள் துணை மேயர் செல்வராசும், அ.பொ.அரசும், எப்படியும் வெற்றி காண முயற்சி எடுத்துக்கொள்வதாகச் சொல்லி விட்டுச் சென்றார்கள். என்ன ஆகி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள ஆவல்தான், என் அறைக்கு எதிர்ப்புறத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/44&oldid=1570148" இலிருந்து மீள்விக்கப்பட்டது