பக்கம்:கைதி எண் 6342.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

திலே சற்றுத் தொலைவிலேதான் மாநகராட்சி மன்றக் கட்டம் இருக்கிறது. ஆனால் இது சிறை! வெளியே நடப்பது எனக்கு எப்படித் தெரியமுடியும்! எது நடை பெறுவதாயினும், நாம் நமது நண்பருக்கு ஆதரவு காட்டினோம், அதிலே ஒரு குறையும் இல்லை, களங்கம் இல்லை, என்று எண்ணித் திருப்திப்படுகிறேன். (காலமெல்லாம் எந்தக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தோழமையை விரும்பி, பெற்று, மகிழ்ந்து வந்தாரோ, அதே கம்யூனிஸ்டுக் கட்சி தான் அவரைக் கைவிட்டு விட்டது. இது, காலத்துக்கும் இருக்கப்போகும் கறை என்பதைக் கம்யூனிஸ்டுகள் உணர மறுக்கிறார்கள்.)

மாலையில், பரிமளம், வளையாபதி முத்துகிருஷ்ணனுடன் வந்து பேசிவிட்டுப் போனது, மனதுக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. இத்தனை நாட்களைக் காட்டிலும் இன்று அதிக நேரமும் பேசிக்கொண்டிருந்தேன்—அதிக கலகலப்பாகவும் பேசினேன். வழக்கு தொடங்கிவிட்டது என்று ஏற்பட்ட உடனேயே, மனதிலே இருந்து வந்த ஒரு மூடுபனி விலகிவிடுகிறது, ஒருபாரம் குறைந்து விடுகிறது. அதுதான் காரணம் என்று நினைக்கிறேன், இன்று பரிமளத்திடம் கலகலப்பாகப் பேசியதற்கு.

அவர்கள் வருவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பு, பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் வந்திருந்தார்—டில்லியில் நடைபெற்றவைகளைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போனார். எனக்காகக் கொண்டுவந்த பிஸ்கட், பழங்களைக் கூட, "எனக்கு வேண்டாம், நால்வருக்குக் கொடு" என்று கூறிவிட்டேன்.

சிறையிலே நானோர் பக்கம்! அந்த நால்வர் வேறோர் பக்கம்!

உள்ளே நான்! வெளியே, என் அன்புக்குரிய தம்பிகள்!

எத்தனை நாட்களோ! எத்தனை மாதங்களோ! யாருக்குத் தெரியும்!!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/45&oldid=1570149" இலிருந்து மீள்விக்கப்பட்டது