பக்கம்:கைதி எண் 6342.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

நாட்களாக 'வெற்றிலை பாக்கு' இல்லாமல் வெறும் வாயனாக இருந்துவந்தேன்—ராஜகோபால் கொண்டுவந்து கொடுத்த வெற்றிலை பாக்கு, எனக்கு மகிழ்ச்சி அளித்தது. கடந்த ஒரு திங்களாகவே, எனக்கு இருந்துவரும், இடதுகைக் குடைச்சலுக்காக, சத்தியவாணி கொண்டுவந்து கொடுத்த 'புலித் தைலம்' வேறு எனக்குக் கிடைத்தது. அதனைத் தேய்த்துக் கொண்டு, வலி சிறிதளவு குறையும் நிலைபெற்று, அதே நினைப்புடன் இன்றிரவு படுக்கச் செல்கிறேன்.

ஞாயிறு,—சிறை சந்தடியற்றுக் கிடக்கும் நாள். வெளியிலிருந்து யாரும் பார்க்க வரக்கூடாது. சிறை அதிகாரிகளின் நடமாட்டமும் மிகக் குறைவு. அன்று "கைதிகள்" சீக்கிரமாகவும் பூட்டிவிடப்படுகிறார்கள். இன்று வெளி உலகத் தொடர்பு எந்த நண்பர்கள் மூலமாகவும் இல்லை; பத்திரிகைகள் மட்டுந்தான். இன்றைய பத்திரிகையில், பண்டித ஜவஹலால் நேருவின் சென்னைப் பேச்சு பெரிய அளவில் இடம் பிடித்துக் கொண்டிருந்தது; அவரேகூட, பத்திரிகையாளர்களின் கூட்டத்தில் இந்தப் போக்கைக் கண்டித்திருந்தார். பண்டிதரின் பேச்சை, பத்திரிகைகள் எப்படிப் பெரிய அளவிலே வெளியிடாமலிருக்கமுடியும்! தி.மு.கழகக் கிளர்ச்சியைக் கண்டித்துப் பேசினாரே!! வழக்கமான கண்டனந்தான்—வார்த்தைகள் கூடப் புதிது இல்லை—சிறுபிள்ளைத்தனம்—கேலிக்கூத்து—இவைபோலத்தான். ஒரு நாட்டு மக்களின் மனதை வெகுவாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் மொழிப் பிரச்சினை பற்றி காட்ட வேண்டிய அக்கறையும், கொள்ளவேண்டிய பொறுப்புணர்ச்சியும், அவருடைய பேச்சிலே மருந்துக்கும் இல்லை. அரசியல் சட்டத்தை எரித்தால் பிரச்சினை தீர்ந்து விடுமா? என்று கேட்டிருக்கிறார். பிரச்சினை, அதனால் தீர்ந்துவிடும் என்று எண்ணிக் கொண்டு தி.மு.க கிளர்ச்சி துவக்கவில்லை, இந்தியை ஆட்சி மொழி ஆக்குவது குறித்து இங்கு நாம் எவ்வளவு மனக் கொதிப்பு அடைந்திருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதே கிளர்ச்சியின் நோக்கம். இதனைப் பல கிளர்ச்சிகளை நடத்திய பண்டிதர் தெரிந்துகொள்ளாமலா இருக்க முடியும்? அதிகாரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/49&oldid=1570153" இலிருந்து மீள்விக்கப்பட்டது