52
விட்டிருந்தால், கம்யூனிஸ்டுகள் அகோரக் கண்டனக் கூச்சலிட்டிருப்பார்கள். நம்பூதிரிபாத் அத்தோடு விடவில்லை, கம்யூனிஸ்டுக் கட்சி, சுதந்திராக் கட்சிக்கும் வாலாகி விட்டது! ஜனசங்கத்துக்கும் வாலாகிவிட்டது என்று கண்டித்திருக்கிறார்.
பொதுவாக, மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டாலொழிய, கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் இவ்விதம் 'அறிக்கைகள்' வெளியிடமாட்டார்கள். பாராளுமன்றத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பே ஒரு கம்யூனிஸ்டுத் தலைவர் மெத்த வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். 'உட்குழப்பம் ஏற்பட்டுவிட்டது; பிளவு அதிகிமாகிவிட்டது; முடிவு எப்படி இருக்கும் என்று கூறமுடியாத நிலை. கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களிலே பலர், காங்கிரசில் சேர்ந்துவிட்டால் கூட நான் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்றார்.
என்றாலும், கம்யூனிஸ்டுக் கட்சியில், குறிப்பிடத் தக்கவர்கள், தவறான தத்துவத்திலும், ஆபத்தான போக்கிலும் கட்சிசென்று கொண்டிருக்கிறது என்பதை உணரத் தலைப்பட்டிருப்பது மட்டுமல்ல, பேசவும் முற்பட்டிருப்பது, வரவேற்கத்தக்க ஒரு மாறுதலாகவே எனக்குத் தென்படுகிறது.
நாளைய தினம் மறியல்—மதி தலைமையில். என்ன முறையைச் சர்க்கார் கையாள இருக்கிறதோ தெரியவில்லை. இன்று இரவு எனக்கெங்கே தூக்கம் வரப்போகிறது! இதே நினைவாக இருக்கும். மறியல் நடத்த விடுவார்களா? கைது செய்வார்களா? அடித்து விரட்டுவார்களா? எதையும் சொல்வதற்கில்லை. ஏனெனில் காங்கிரஸ் சர்க்காரின் போக்கு எந்த இலக்கணத்துக்கும் உட்பட்டதாகவே இல்லை—கொச்சையாகப் பேசிக்கொள்வார்களே, சித்தன் போக்கு சிவன் போக்கு என்று, அது போல இருக்கிறது! எதற்கும், நாளைய தினம் மதி இங்கே வருவார் என்ற எண்ணத்துடனேயே இன்றிரவு, படுக்கச் செல்கிறேன்.