62
பட்டு விடுமேயானால், எதையும் எழுத முடியாது. இந்தக் கவலையைச் சுமந்து கொண்டே படுக்கச் சென்றேன்.
தனியாக அடைபட்டுக்கிடப்பவன் என்று கூறினேனே தம்பி! அது முழு உண்மை அல்ல!! எனக்குத் துணையாக, சுறுசுறுப்பான எத்தனை எத்தனை மூட்டைப் பூச்சிகள், கொசுக்கள்!!
டில்லியிலிருந்து திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகரனும், ராஜாராமும், பாராளுமன்றத்திலே எழுப்பட்ட மொழிப் பிரச்சினை பற்றியும், பண்டித ஜவஹர்லால் நேருவிடம் பேசியதுபற்றியும் கூறினார்கள். இன்று காலையில், மதி, பொன்னுவேல், பார்த்தசாரதி, சுந்தரம், வெங்கா ஆகிய தோழர்கள், நான் இருக்கும் பகுதி வழியாக, ஊசி போட்டுக் கொள்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள். பார்க்க முடிந்தது. என்ன? என்ன? என்ற என் கேள்விக்கு, கரத்தைக்காட்டினார்கள், ஊசி போட்டுக் கொண்டதைக் குறிப்பிட வார்டர், வேகமாக அவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு போய் விட்டார்.
ஐந்தாம் தேதி வழக்கு விசாரணை அல்லவா—12 மணிக்குமேல் துவங்கிற்று. நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர்—சிறிதளவு அவர்களுடன் அளவளாவ முடிந்தது. எந்தச் சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யாததால், ஒரே நாளில் எல்லாச் சாட்சிகளையும் விசாரிக்கும் கட்டம் முடிந்துவிட்டது. பிற்பகல் 2-லிருந்து மூன்று வரை, வழக்கு மன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்ததால், ஐவருக்கும், நண்பர்கள் அங்கேயே சாப்பாடு கொண்டுவந்தார்கள். மீண்டும் 3 - மணிக்கு வழக்குத் தொடர்ந்தது—எல்லாச் சாட்சிகளும் முடிகிறவரையில் நடைபெற்றது. பத்திரிகையில் பார்த்துக்கொள்வாய் என்பதால் விவரம் எழுதவில்லை, 7-தேதி, நான் வழக்கு மன்றத்தில், என் நிலையை விளக்கி ஒரு அறிக்கை தர இருக்கிறேன். அநேகமாக 12-ம்தேதி தீர்ப்பு அளிக்கப் படலாம் என்று தெரிகிறது. இன்று வழக்குமன்றத்துக்கு இரண்டு வாரம் சிறையிலிருந்துவிட்டு மதுரை முத்து வந்திருந்தார். மிக உற்சாகமாகவே காணப்பட்டார்.