67
இறுதிப் பயணத்திலே ஈடுபட்டுவிட்ட நான் இனியும் இருந்து உன்னைக் கவனித்துக் கொள்ளவா?—நடவாது மகனே! நடவாது! நான் போகிறேன் உன்னை விட்டு விட்டு! என்னை இனியும் எதிர்பார்க்காதே!!—என்றல்லவா, நிலைமை தெரிவிக்கிறது.
ஆறு நாட்கள் அருகேயே இருந்தேன்—இரவும் பகலும்—ஊண் உறக்கம் மறந்து—அழுத கண்களுடன்—பாதிப் பயணத்தில் என் நினைவு வந்து, திரும்பி வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில்—என் எண்ணத்தில் மண் விழுந்தது; இதயத்தில் நெருப்பு விழுந்தது; யார் மறுபடி எழுந்து நடமாடி என்னைக் களிப்படையச் செய்விப்பார்கள் என்று எண்ணினேனோ, அந்த என் 'தொத்தா' தீயாலான படுக்கையில் கிடத்தப்பட்டு, என் கண்ணெதிரே சாம்பலாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கொடிய காட்சியைத்தான் நான் காணவேண்டி நேரிட்டது.
அவர்கள் மனம் நோகும்படி நான் நடந்துகொண்டதே இல்லை—இத்தனை வருஷங்களில். நான் ஏதாகிலும் சிறு சிறு தவறுகளைச் செய்து, அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டிருந்திருந்தால், அவற்றினுக்கான தண்டனையைச் சிறுகச் சிறுக, அப்போதைக்கப்போது எனக்கு அவர்கள் தரவில்லை. மொத்தமாக, ஒரே நாள், ஒரே தண்டனையாகத் தருவதுபோல், என் கண்ணெதிரே, வெந்தழலில் கிடந்தார்கள்—பார் மகனே! பார்! படுமகனே படு! என்று கூறுவது போலிருந்தது அந்தக் கொடுமை.
சே! அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அந்த நேரத்தில் அவர்கள் உயிர்பெற்று எழுந்தாலும், முதலில் மகனே! மிகவும் பயந்துவிட்டாயா! மிகவும் வேதனைப் பட்டாயா! என்று தான் கேட்டிருந்திருப்பார்கள். அவர்கள், எனக்குவேதனை மூளக்கூடாதே என்பதற்காகவே மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்—சில ஆண்டுகளாகவே—அவர்களால் முடிந்தவரையில் போராடிப் பார்த்தார்கள்—மரணத்தின் பிடியின் வலிமை கடைசியில் அவர்களைக் கொண்டு சென்றுவிட்டது.
மூளைக் குழாய்கள் சேதமடையும்படியான அதிர்ச்சி அவர்கள் ஏன் கொள்ள நேரிட்டது—நான் சிறைப்பட்ட