69
எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர்களோ, இத்தனை முறை தாங்கிக் கொண்டேன்—இந்த முறை முடியாது—தாங்கிக்கொள்ளும் வலிவை இழந்துவிட்டேன்—என்று தெரிவிப்பதுபோல, என்னைவிட்டுப் போய்விட்டார்கள். எனக்கு என் சிற்றன்னை, எத்தனையோ விதமான 'புத்தி மதி'களைக் கற்றுக் கொடுத்தது மட்டுமல்ல, வேதனையைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதனையும், சில ஆண்டுகளாகவே, எனக்கு எடுத்துக் கூறிக்கொண்டு வந்தார்கள். சில ஆண்டுகளாகவே அவர்களுக்கு உடல்நலமில்லை—அடிக்கடி, 'பயப்படும்படியான' கட்டங்கள் ஏற்பட்டு விடும்—அப்போது நான் மிக வேதனையில் ஆழ்ந்திருப்பேன்—அவர்கள் நல்ல நிலை அடைந்த உடன், என்னிடம் கூறுவார்கள், "பைத்யமே! இந்த வயதிலே எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்காக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாமா—தைரியத்துடன் இருக்கவேண்டாமா—ஆகவேண்டியவைகளை நடத்திவிட வேண்டாமா—அழுது கொண்டிருக்கிறாயே"—என்று சொல்லுவார்கள். ஆகவேண்டியவைகளை நடத்திவிட்டேன். வேறு என்ன செய்யமுடிந்தது என்னால்? என் உடலில் ஒரு துளி மாசுபடக்கூடப் பார்த்துச் சகித்துக் கொள்ள மாட்டார்கள்—அத்தகைய என் சிற்றன்னையின் உடலுக்குத் தீ மூட்டினேன். எத்தனை கொடிய கரங்கள், எனக்கு இருப்பவை! சே!. எப்போதுமே, மிகச் சுறுசுறுப்பான அறிவுத்திறமை அவர்களுக்கு உண்டு. அதிலும் சில ஆண்டுகளாக, அவர்கள் அரசியல் பிரச்சினைகளை, நுட்பமான அரசியல் பிரச்சினைகளை, மிக ஆராய்ந்து அறிந்துகொள்ளத் தலைப்பட்டார்கள். உடல் வலிவிழந்த நிலையில், வெளியே நடமாடுவது அவர்களுக்கு இயலாது போய்விடவே, தனது நேரத்தில் பெரும்பகுதியை, படிப்பதில் செலவழிக்கத் தொடங்கினார்கள்—நான் ஈடுபட்டுள்ள பிரச்சினைகளில் அக்கரை காட்டத் தொடங்கினார்கள். ஆதரவாகப் பேசத் தலைப்பட்டார்கள். இன்ன விஷயத்தை இன்னவிதத்தில் எடுத்துச் சொல்லவேண்டும் என்று எனக்குக் கூறுவதில் ஈடுபட்டார்கள். நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி நியாயமானது என்பதிலே அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, நமது கழக வளர்ச்சியிலே மிகுந்த அக்கரை