75
நான் பரோலில் வந்ததைக் கேலி செய்து பேசியதையும் பத்திரிகையிலே கண்டேன். அரசியல்துறை இத்தகைய காட்டு உணர்ச்சிகளையா தூண்டிவிட வேண்டும். அரசியல் பகையுணர்ச்சியைக் காட்டிக்கொள்ள, பண்பிழந்து, மனிதத்தன்மை இழந்தா பேச முற்படவேண்டும்! என்னையோ,என் கழகத்தையோ, கண்டிக்க வேறு வழியே இல்லையா—முறையே கிடையாதா! சிற்றன்னையை இழந்து நான் தவித்துத் கிடக்கும் போது, குடும்பத்தாருடன் இருந்து துக்கத்தைப் பங்கிட்டுக்கொள்ள, பரோலில் சென்றது நியாயத்திற்கு அப்பாற்பட்டதா! பெரும் காங்கிரஸ் தலைவர்கள் பரோலில் சென்றது இல்லையா? பல்வலிக்காக பரோலில் சென்றவர்கள் எனக்குத் தெரியும்; பண்பிழந்து பேசின சிலருக்குத் தெரியாதிருக்கலாம். அரசியல் துறையில் இத்தகைய அநாகரீகம் புகக்கூடாது என்பதற்காகவே இதுபற்றி எழுதுகிறேன். இருபத்தியோரு நாட்கள் பரோல் என்றால், என் தண்டனைக் காலத்தில் இருபத்தியோரு நாட்கள் குறைந்துவிடும் என்று பொருள் அல்ல—அந்த இருபத்தியோரு நாட்கள், நான் சிறையில் இருந்துவிட்டு வரவேண்டும், இனாம் பெறவில்லை; இருபத்தியோரு நாட்களைக் கடனாகப் பெற்றேன்; திருப்பித் தந்தாகவேண்டும். எத்தனை இழிமொழி, கேலி மொழி இதற்கு! இதைக் காரணம் காட்டியா தேர்தலில் வெற்றி பெறவழி தேடுவது. அவ்வளவு வக்கற்றுப்போன நிலை வந்துவிட்டதா! அவ்வளவு வறண்டுபோய் விட்டதா, நெஞ்சத்தின் ஈரம்; நேர்மை; பண்பு! எண்ண எண்ணத் திகைப்பாக இருக்கிறது. கள்ளநோட்டு வழக்கிலே சிறை புகுத்தவர்கள், இரண்டு மாதங்கள் 'பரோல்' பெறுகிறார்கள், குடும்ப,வியாபார விவகாரத்தைக் கவனிக்க—இந்த அரசில். என் சிற்றன்னையின் மறைவுக்காக நான் 'பரோல்' பெற்றதைக் கண்டிக்க, கேலி பேச, ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்களுக்கு, மனம் வருகிறது, அத்தகைய பேச்சை, அரசியல் பேச்சு என்றும் அவர்கள் கருதுகிறார்கள். எல்வளவு தரம் கெட்ட நிலைக்கு வந்துவிட்டது அரசியல்!! அரசியலா! அல்ல! அல்ல! அதிலே இலாபம் காணும் போக்கினர், அவ்வளவு தரம் கெட்ட நிலைக்கு வந்துவிட்டனர்.