பக்கம்:கைதி எண் 6342.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மருத்துவ மனைக்கு நான் சென்றது கூட, மாலை நேரப் பேச்சுக்கு, அந்த மகானுபாவர்களுக்குப் பயன்பட்டு விட்டது.

என் இடத்தோளில் ஏற்பட்ட வலி, இன்னும் அடியோடு போய்விடவில்லை—எளிதாகவும் போய் விடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வலக்கரத்தைக் தூக்கும் அளவுக்கு இடக்கரம் தூக்க வராது; ஒரு விதமான பிடிப்பு ஏற்பட்டுவிட்டிருக்கிறது—ஆர்தர்டிஸ் என்று பெயர் கூறுகிறார்கள். இடத்தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகம் தடித்துப் போய்விடுவதால், கை தூக்குவதிலே இடையூறு ஏற்பட்டு விடுகிறது. ஏன் தடித்துப் போகிறது? மருத்துவ நூலில், விளக்கம் இல்லை. வயதானால் தடித்துப்போகலாம்—குளிர்காற்றின் வேகம் தாக்கித் தடித்துப்போகலாம்-இவைகளெல்லாம், காரணங்களாகக் காட்டப்படுகின்றன—இதுதான் காரணம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுவதற்கில்லை. அதைப் போலவே, இதனைப் போக்க, திட்ட வட்டமான முறையும், உடனடியான பலன் தரத்தக்க மருந்தும் இல்லை. இது அடியோடு நீங்க, மாதக் கணக்கில் ஆகலாம், வருடக் கணக்கும் ஆகலாம்—இதற்குச் செய்ய கூடியதெல்லாம், பிடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில், மின்சாரத்தின் மூலம், 'ஒத்தடம்' கொடுப்பது; விடாமல் தேகப்பயிற்சி செய்வது; வலி தெரியாதிருக்க மாத்திரைகள் சாப்பிடுவது, இவைகளே. இப்போதும், எனக்கு அந்த வலியும் இருக்கிறது; தூக்கும் நிலையில் பிடிப்பு இப்போதும் இருக்கிறது. வலி மிக அதிகமாக இருந்ததுடன், வலக்கரத்துக்கும் வலி படை எடுத்த நிலைபற்றி, குறிப்பிட்டேன் அல்லவா; அது கண்டுதான் நான் அச்சம் கொண்டேன். பொதுவாக இடப்பக்கம் தோளோ, கரமோ, வலி எடுக்கிறது என்றால், இருதய சம்பந்தமானதாக இருக்கக்கூடும்; அப்படியா, அல்லது வேறுவிதமா என்பதைக் கண்டறியும் சாதனம், சிறை மருத்துவ மனையில் இல்லை. அதனாலேயே நான் சர்க்கார் மருத்துவ மனைக்குச் செல்ல விரும்பினேன். மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டால், சிறையில் இருப்பது போன்ற கட்டுக்காவல் இருக்காது, சிட்டுப் போலச் சிற-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/76&oldid=1572007" இலிருந்து மீள்விக்கப்பட்டது