78
கிருமிகள் உள்ளனவா, என்று ஆராய்ந்தனர். எனக்குள்ள வலி, பெரி-ஆர்திடிஸ்-என்பதாகும் என்று முடிவாயிற்று. மின்சார ஒத்தடமும் முறையான தேகப்பயிற்சியும் அளிக்கப்பட்டன. டாக்டர் நடராசன், எலும்பு சம்பந்தமான கோளாறுகளைச் சரிப்படுத்தும் நிபுணர். நமது எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு, கால் எலும்பு முறிந்திருந்த போது மிகத் திறமையாகக் கவனித்து, எந்தவிதமான ஊனமும் ஏற்படாமல், எம். ஜி. ரரமச்சந்திரனை எழுந்து நடமாட வைத்தவர் இதே டாக்டர் நடராசன் அவர்களே. இளம் பிள்ளை வாதத்தால் வதைபடும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறையை, நேர்த்தியாக அமைத்து, மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறார். இந்தத் துறையில், மற்ற எந்த மருத்துவ மனையையும் விட, சிறப்பானதாக, இங்கு அமைய வேண்டும் என்பதிலே, டாக்டர் நடராசன் மிகுந்த அக்கரை கொண்டுள்ளார். என் வலி போக்க அவர் துவக்கிய மின்சார சிகிச்சை முடிவடைய ஒரு வாரம் இருக்கும் போது, அவர் அறுவைத் துறை நிபுணர்களின் மகா நாட்டிலே கலந்து கொள்வதற்காக, கல்கத்தா புறப்பட்டார். மறுநாளே நான், காஞ்சிபுரம் செல்லவேண்டி ஏற்பட்டு விட்டது.
டாக்டர் இரத்தினவேலு சுப்ரமணியம் மருத்துவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பவர்—ஆழ்ந்த அறிவுத் தெளிவும், மிக அமைதியான இயல்பும், நோயாளிகளிடம் கனிவும் காட்டும் இவருடைய பார்வையும் பேச்சுமே, மருந்தாகிவிடும். எப்போதும் ஓர் புன்னகை தவழும் நிலையில் இருப்பவர்; மிகுந்த நகைச்சுவையுடன் பேசுபவர். என்னுடைய உடற்கூறு அவருக்குக் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே நன்கு தெரியும். சில திங்களுக்கு ஒருமுறை அவரிடம் சென்று, என் உடல் நிலைபற்றிக் கூறி, மருந்து பெறுவது வாடிக்கை—பத்து ஆண்டுகளாகவே. அவருடைய தனியான கவனிப்பு எனக்குக் கிடைத்தது கண்டு நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு வந்துற்ற, பெரி-ஆர்தடிஸ்சின் இயல்புபற்றி அவர் கூறியபிறகு, எனக்கு வலி கண்டவுடன் ஏற்பட்ட குழப்பமும் அச்சமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. தொடர்ந்து ஒரு பத்து