பக்கம்:கைதி எண் 6342.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மாத்திரை உட்கொள்ளலாம், வேறு ஏதும் செய்வதற்கில்லை என்றுகூறி, மருத்துவமனையிலிருந்து பிப்ரவரி 13-ம் நாள், என்னை மீண்டும் சென்னை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தார்கள். டாக்டர் சத்தியநாராயணா, 21-ந்தேதி் வர வேண்டும், ஒரு ஊசி போடப் போகிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள். டாக்டர் இரத்தினவேலு சுப்ரமணியம் அவர்கள், சில காலத்துக்கு, வாரம் ஒருமுறை மருத்துவமனை வந்து, பரிசோதித்துக்கொள்ள வேண்டும், அதுபற்றி நான் சர்க்காருக்கு எழுதி இருக்கிறேன் என்று கூறினார்கள். அவருடைய யோசனையை சர்க்கார் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. டாக்டர் சத்தியதாராயணா குறித்திருந்தபடி 21-ந் தேதி மருத்துவமனை சென்று, அரை மணி நேரத்திற்கெல்லாம் திரும்பினேன்—மறுபடியும், மார்ச் 20-ம் நாள் வரச்சொல்லி இருக்கிறார். இப்போது கூட, வலி இருந்தபடி இருக்கிறது—இன்று பிற்பகல் கூட, வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டேன். வலி மறப்பதற்காக ஒரு நாளைக்கு மூன்று வேளை நொவால்ஜின் மாத்திரைகள் உட்கொள்கிறேன். மருத்துவமனை சென்று திரும்பியதில் வலிபற்றி அச்சம் எழத்தக்க குழப்பம் நீங்கி, என்னோடு நீண்டநாள் இருக்கும் நினைப்புடன் இந்தவலி இருக்கிறது என்பது புரிந்துவிட்டது.

மருத்துவ மனையிலிருந்து சிறை செல்லும் ஏற்பாடு பற்றி, ராணி பரிமளம் ஆகியோருக்குத் தெரியாது—ஆகவே அவர்கள் வழக்கம்போல் அன்று மாலை வருவார்கள்—ஏமாற்றமடைவார்கள். இதைத் தவிர்க்க முடியுமா என்று எண்ணினேன்—மேலும் நான் படித்து முடித்து விட்ட புத்தகங்களை வீட்டிற்குக்கொடுத்தனுப்ப வேண்டும். எப்படி? என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் தோழர் ஆசைத்தம்பி வந்தார்—அவரிடம் புத்தகக்கட்டை கொடுத்து வீட்டிலே சேர்த்துவிடும் படியும், நான் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது பற்றிப் பரிமளத்திடம் கூறும் படியும் தெரிவித்தேன். ஆசைத்தம்பி, அதற்கு முன்பே இரண்டொருமுறை என்னை வந்து பார்த்தார்—மிகுந்த உற்சாகமாகத் தேர்தல் பணிகளைக் கவனித்துக் கொண்டு வருவதாகக் கூறினார். சென்னையில் வெற்றி நிச்சயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/82&oldid=1572023" இலிருந்து மீள்விக்கப்பட்டது