84
என்னைக் கவனித்துக்கொண்ட டாக்டர்களில் சுந்தரகாந்தி என்பவரும், சங்கர் என்பவரும் குறிப்பிடத்தக்கவர்கள். டாக்டர் சொக்கலிங்கம் எனும் என் நண்பரும் எனக்குத் துணை புரிந்தார்.
மருத்துவ மகளிர் பலர்—உடன்பிறப்புகள் போன்ற அன்புடன் பணியாற்றிவந்தனர்.
நாவலரும், நடராசனும், கருணாநிதியும், வழக்கறிஞர் நாராயணசாமியும் அடிக்கடி வந்து என் உடல் நலம் குறித்து விசாரித்தவண்ணம் இருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன் ராஜாராம், முத்து ஆகியோரும், அரங்கண்ணல், சி.வி. ராசகோபால், கிட்டு, மற்றும் பலரும் பலமுறை வந்து அளவளாவினர்.
நகராட்சி மன்றத் தேர்தல்கள், நான் மருத்துவமனையில் இருந்தபோதே துவங்கிவிட்டன. பம்பரம் போலச் சுழன்று அதிலே பணியாற்றும் என் தம்பிகளுடன் இருந்து பொறுப்பை ஏற்கும் வாய்ப்பை இழந்து, மொத்தச் சுமையையும் அவர்கள் தாங்கித் தத்தளிக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டு, நான் மருத்துவ மனையில் படுத்துக் கொண்டேன். தேர்தல் நிலைமைகளைப் பற்றி, களைத்துப்போய் இளைத்துப்போய். கருணாநிதியும், நடராசனும், நாவலரும் மற்றவர்களும் என்னிடம் வந்து சொல்லும்போதெல்லாம், அவர்களை இவ்வளவு தவிக்கச் செய்கிறேனே என்று என்னை நானே நொந்துகொண்டேன். எத்தனை விதமான இன்னல்கள்—எத்தனை எத்தனை எரிச்சலூட்டும் நிலைமைகள்—எத்தகைய கொடிய, இழிதன்மை மிகுந்த எதிர்ப்புகள், என்னென்ன சிக்கல்கள், பிரச்சினைகள், புகைச்சல்கள்—இவ்வளவுக்கும் இடையிலே அவர்கள் உழன்று கொண்டிருக்க, நான், மருத்துவ மனையில்! எனக்கு அதனை எண்ணும்போது மிகுந்த வேதனையாகக் கூட இருந்தது. ஆனால் அந்த வேதனைக் கிடையிலேயே மற்றவர்களின் சாமர்த்தியம் தெரிந்தது. எதையும் பொறுப்பேற்றுசெம்மையாகச் செய்திடும் ஆற்றல் மிக்கதோர் அணி அமைந்துவிட்டிருக்கிறது—நாமே முன்னின்று செயல்பட வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை—என்னை மகிழ்விக்க