பக்கம்:கைதி எண் 6342.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

ஒன்று கூடிற்று என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். பொன்னேரியில் சுந்தரமும், காஞ்சிபுரத்தில் பார்த்தசாரதியும், பூவிருந்தவல்லியில் பொன்னுவேலும். செங்கற்பட்டில் வெங்காவும் சிறை வைக்கப்பட்டிருந்த சம்பவம் முதற்கொண்டு, தொடர்ந்து நடைபெற்ற பல சம்பவங்களைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இன்று மாலை, காஞ்சிபுரம் மறியலில் ஈடுபட்டு சிறைத்தண்டனை ஏற்றிருக்கும் கேசவன் குழுவினர், சிறை உடையில், உட்புறம் அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்டேன். அடையாளம் தெரியவில்லை. சிறை உடை அத்துணை அலங்கோலத்தைக் கொடுத்து விட்டது. நேற்று, சின்னசாமி குழுவினரும், பிறகு சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியும் சிறை கொண்டு வரப்பட்டனர். ராமசாமியை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள் வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ளனர். சிறை வார்டர்கள் மூலமாக அவர்களைப் பற்றிய செய்தி அறியலாமா என்றால், ஒருவரும் பேசுவதில்லை—அவ்வளவு அச்சம் ஊட்டப்பட்டிருக்கிறது! இன்று மாலை, எங்கள் பகுதியின் நுழைவு வாயிலருகே, தரையில் பாய் போட்டு, உட்கார்ந்து கொண்டு, தேய்ந்துபோன நிலையில் உள்ள கைதிகளை, வார்டர்கள் உட்புறம் அழைத்துக்கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவர்கள் பல்வேறு குற்றங்கள் செய்ததற்காக இங்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். இங்கு இவர்கள் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது, விடுதலை பெற்று வெளியே செல்லும்போது சமூகத்திலே இடம் பெற்று, செய்யும் தொழில் கிடைக்கப்பெற்று, புதுவாழ்வு பெறப் போகிறார்களா என்பதை எண்ணிக்கொண்டேன். வெளியில் இருந்தபோது, நாணயமான தொழில் நடத்திப் பிழைக்க முடியாமல், குற்றம் இழைத்தார்கள்; உள்ளே வந்ததன் காரணமாக, எந்தத் தொழிலுக்குமே இலாயக்கற்ற 'உருவங்கள்' ஆகிவிடுகிறார்களே, இவர்கள் இனி வெளியே போய் என்ன பலன் காணப்போகிறார்கள் என்பதை எண்ணியபோது, மிகுந்த கவலையாகிவிட்டது. இந்தக் கவலையுடனேயே இன்றிரவு படுக்கச் செல்லவேண்டும் போலிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/91&oldid=1573246" இலிருந்து மீள்விக்கப்பட்டது