92
28—2—64
சிறை, எதனாலே கொடுமையானதாகிறது என்பது பற்றி யோசித்துப் பார்த்தேன்; அறையில் போட்டு அடைத்துப் பூட்டி வைக்கிறார்கள் என்பதால் மட்டும் அல்ல, அதிகாரிகளின் அக்கறை அற்ற போக்கு மனதுக்குச் சங்கடம் தருகிறது என்பதால் மட்டுமல்ல, கொடுமைக்கு மிக முக்கியமான காரணம், ஒரு நாள் போலவே மற்ற எல்லா நாட்களும் உள்ளன! ஒவ்வொரு நாளும், வேக வேகமான நினைப்புகளில் நடவடிக்கைகளில், தம்மை ஈடுபடுத்திக் கெண்டுள்ளவர்கள், எல்லா நாட்களும் ஒரே விதமாகவே தோற்றமளிக்கும்படியான நிலை, சிறையில் இருப்பதைத்தான், தாங்கிக் கொள்ள முடியாத கொடுமை என்று உணருவார்கள். ஒரு நாள் நடவடிக்கையை, விவரித்தால், அதுமற்ற எல்லா நாட்களுக்கும் பொருந்துவதாக அமைந்து விடும். இன்று என்ன நிகழ்ச்சிகள் என்று கணக்கிட்டுக் காட்டுகிறேன்—காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, சிறை உடை அணிந்துகொண்டேன். மெத்த அன்புடன், முகமலர்ச்சியுடன் தோழர் பார்த்தசாரதி 'தோசை' கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்—அவருடைய முகம் எவ்வளவு மலர்ந்திருந்ததோ அந்த அளவுக்கு 'தோசை' என்ற பெயர் படைத்த அந்தப் பண்டம், கறுத்து, வறண்டுபோய் இருந்தது. கோதுமை மாவினாலே செய்யப்பட்ட மெல்லிய அடை! பிறகு காபி; நிறத்தாலே அந்தப் பெயர் பெறுகிறது. மணத்தாலும் சுவையாலும் அல்ல. பிறகு நூற்பு வேலை—இழையின் நீளம் எவ்வளவு என்பதைவிட எத்தனை முறை அறுந்தது என்பதுதான் என் நினைவிற்கு வருகிறது. பிற்பகல் I மணிக்குச் சாப்பாடு. காலையில் ஒன்பது அல்லது பத்து மணிக்கெல்லாம் செய்யப்பட்டு நன்றாக சில்லிட்டுப் போன நிலையில், எங்களுக்காக உட்புறமிருந்து கொடுத்தனுப்பப் படும் சோறு; பருப்பு கலந்த குழம்பு—கலந்த என்று உபசாரத்துக்காகச் சொல்கிறேன்—துறவிகள் உலகிலே வாழ்ந்தாலும் பற்றற்று இருப்பார்கள் என்கிறார்களே அதுபோல, பருப்பும் குழம்பும் ஒரே குவளையில் உள்ளன—ஒன்றுக் கொன்று பாசமற்று! எனவே சுவை இருப்பதில்லை. கரு நிறமுள்ள, ரசம்! பிறகு, எங்களுக்கு அளிக்கப்படும்