பக்கம்:கைதி எண் 6342.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

எனும் திருத்தலத்தை அடைவான். இடையே இச்சை எனும் நச்சுக்கொடி கிடக்கும்; பச்சென்று இருக்கிறதே என்று பார்த்தாலோ சிக்கினோரைச் சீரழிக்கும். அதற்கு நிராசை எனும் சாட்டை கொண்டு குதிரையைத் தட்ட வேண்டும்."

மட அதிபரின் பேச்சல்லவா? இதை ஏன், சிறையில் உள்ள நான் எடுத்துக் கூறுகிறேன் என்று எண்ணுகிறீர்கள்.

நான் அல்ல; நண்பர் மதியழகன் இன்று, மடாதிபதி போலவே, எங்கள் அறையில் உள்ள 'சிமெண்ட்' திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, இதுபோலப் பேசினார். பேச்சு அல்ல; இது பாடம். 'சந்திரோதயம்' என்ற நாடகத்தில் அவர் அழகூர் மடாதிபதியாக வேடம் தாங்கிப் பேசுவது. அதனை இன்று நினைவுபடுத்திக் கொண்டார். ஏன் என்கிறீர்களா? நமது கழகப் பிரச்சாரத்துக்காக, முன்பு நாடகங்கள் நடத்துவோமே- அது நின்றுபோய்விட்டது நல்லதல்ல, மறுபடியும் நாடகங்கள் போட வேண்டும் என்ற யோசனை பற்றிய பேச்சு எழவே, மதி, இந்த மடாதிபதி உரையை எடுத்துக்கூறி, சட்டசபையில் மடாலயங்கள் பற்றிய விவாதத்தின்போது, இந்த வாசகங்களை, தான் கூறியதாகச் சொன்னார். அமைச்சர்கள்கூட மகிழ்ச்சி அடைந்தார்களாம். நாடகங்கள் நடத்துவதுபற்றிய பேச்சு வளர்ந்து, பொதுவாக, கழகப் பிரசார முறைகள், அளவு, இவைபற்றிய விவாதமாக மலர்ந்தது. இம்முறை மாநகராட்சிமன்றத் தேர்தலில், நமது கழக ஆதரவுக்காக மறைந்த நகைச்சுவை அரசர் என். எஸ். கிருஷ்ணனின் மகன் கோலப்பா வில்லுப்பாட்டும், சேதுராசன் பலகுரல், நிகழ்ச்சியும், நல்ல முறையில் நடத்தி இருக்கிறார்கள் என்பதை இதழ்களில் கண்டோம். அதுபற்றி மகிழ்ச்சியுடன் பாராட்டினேன். நாடகங்கள் தேவைதான்—ஆனால், நான் இனி நடிப்பது இயலாது—நீங்களெல்லாம் நடிக்கலாமே என்று அன்பழகள் ஆகியோரிடம் கூறினேன். அவர்களுக்கு விருப்பம் எழுந்ததை உணர்ந்து மகிழ்ந்தேன். நாடகம் எழுதிக் கொடுங்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கைதி_எண்_6342.pdf/96&oldid=1573230" இலிருந்து மீள்விக்கப்பட்டது