பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

பதற்கு முன்னமே, இளஞ்சேரல் இரும்பொறை இறந்து போனான் என்பதைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம்.அதனை இந்நூலில் இன்னொரு இடத்தில் (இரும்பொறையரசர்களின் கால நிர்ணயம்) காண்க.

பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பிறகு, அவனுடைய தம்பி குட்டுவன் இரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டை அரசாண்டான். குட்டுவன் இரும்பொறை பெருஞ் சேரலிரும்பொறைக்கு முன்னமே இறந்து போனதை அறிந்தோம். பெருஞ் சேரலிரும்பொறையின் மகன் சிறுவனாக இருந்தபடியால், அப்போது வயது வந்தவனாக இருந்த இளஞ் சேரலிரும்பொறை அரசனானான்.

இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்க் கிழார் 9 ஆம் பத்துப் பாடினார். ‘பாடிப்பெற்ற பரிசில்’ “மருளில்லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரங் காணம் கொடுத்து அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்புமறம் தான் விட்டான் அக்கோ.' (9-ம் பத்துப் பதிகக் குறிப்பு.)

இளஞ்சேரல் இரும்பொறை போரில் வெற்றி பெற்றான் என்று பெருங்குன்றூர் கிழார் கூறுகிறார். எந்தப் போரை வென்றான் என்பதைக் கூறவில்லை. இவனுடைய முன்னோர்கள் வென்ற போர்களைச் சிறப்பித்துக் கூறி, அவர்களின் வழி வந்த புகழையுடையவன் என்று கூறுகிறார். ‘காஞ்சி சான்ற செருப்பல’ செய்தான் என்று கூறுகிறார். இவன், “சென்னியர் பெருமான் (சோழன்) உடன் போர் செய்தான்

என்றும், அப்போரில் சோழன் தோற்றுப் போனான்” என்றும் கூறுகிறார்.(9-ஆம் பத்து 5) “பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண், ஒன்னாப்பூட்கைச் சென்னியர் பெருமான்.” இந்தச் சென்னியர் பெருமான், செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.