பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தன்னுடைய சேனைத் தலைவனான பழையன் கட்டூர்ப் போரில் மாண்டு போனதையும் தன்சேனை தோற்றுப் போனதையும் அறிந்த சோழன் பெரும்பூண் சென்னி மிக்க சினங் கொண்டான். அவன் தன்னுடைய சேனையுடன் புறப்பட்டுக் கொங்கு நாட்டிலிருந்த, இளஞ்சேரலிரும் பொறைக்கு உரியதான கழுமலம் என்னும் ஊரின் மேல் சென்று போர் செய்தான். அவ்வூரின் தலைவனான கணயன் சோழனை எதிர்த்துப் போரிட்டான். சோழன் போரில் வெற்றி கொண்டு கழுமலத்தைக் கைப்பற்றினதோடு கணயனையும் சிறைப்பிடித்தான். இந்தப் போர்ச் செய்திகளை யெல்லாம் குடவாயிற் கீரத்தனார் கூறுகிறார்.*

       சோழன் பெரும்பூண் சென்னியைச் சோழன் செங்கணான் என்று தவறாகக் கருதுகிறார் சேஷ ஐயர்.** இது தவறு.
       இளஞ்சேரல் இரும்பொறையின் கீழ் கழுமலத்தில் சிற்றரசனாக இருந்த கணையனைக் கணைக்காலிரும்பொறை என்று டாக்டர் மா. இராசமாணிக்கனார் தவறாகக் கருதுகிறார்.***
       கணையன் வேறு கணைக்காலிரும்பொறை வேறு.
       சோழன் பெரும்பூண் சென்னியும் சோழன் செங்கணானும் வெவ்வேறு காலத்திலிருந்தவர்கள். இளஞ்

* 'நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுத்திறல் கங்கன் கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்றாங்கு, அன்றவர் குழி இய அளப்பருங் கட்டூர்ப், பருந்துபடப் பண்ணி பழையன் பட்டெனக், கண்டது நோனானாகித் திண்தேர்க், கணையன் அகப்படக் கழுமலந்தந்த, பிணையலங் கண்ணிப் பெரும்பூண் சென்னி ” (அகம் 44:7-14).
** P. 68. Ceras of Sangam period K.G. Sesha aiyar)
*** பெரிய புராண ஆராய்ச்சி பக்கம் 86-94-Date of Ko-Chenganan, Journal of Madras university Vol. xxxi No. 2. P. 177-82)