பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


இளஞ்சேரல் இரும்பொறை பதினாறு ஆண்டு வீற்றிருந்தான் என்று 9-ஆம் பத்துப் பதிகக் குறிப்பு கூறுகிறது. இளமையிலேயே ஆட்சிக்கு வந்த இவன் குறுகிய காலத்திலேயே இறந்து போனான் என்று தெரிகிறபடியால் இவன் ஏதோ போர்க்களத்தில் இறந்திருக்க வேண்டும் என்று கருதலாம். எங்கே எப்படி இறந்தான் என்பது தெரியவில்லை. ஆனால், இவனுடைய மூத்தவழித் தாயாதிப் பெரிய தந்தையாகிய சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமே இறந்து போனான் என்பது ஐயமில்லாமல் தெரிகிறது. இதைச் சிலப்பதிகாரத்திலிருந்து அறிகிறோம். சேரன் செங்குட்டுவன் கண்ணகியாருக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்துச் சிறப்புச் செய்து கொண்டிருந்த போது, இவனுடைய தூதனாகிய நீலன், கனக விசயரைச் சோழனுக்கும் பாண்டியனுக்கும் காட்டிவிட்டுத் திரும்பி வந்தான். வந்தவன், கனக விசையரைச் சிறைப் பிடித்து வந்ததைப் பாராட்டாமல் சோழனும் பாண்டியனும் இகழ்ந்து பேசினதைத் தெரிவித்தான். அதுகேட்ட செங் குட்டுவன் சினங்கொண்டு அவர்கள் மேல் போருக்குச் செல்ல எண்ணினான்.


அவ்வமயம் அருகிலிருந்த மாடலன் என்னும் மறையோன் செங்குட்டுவனின் சினத்தைத் தணிக்கச் சில செய்திகளைக் கூறினான். "உனக்கு முன்பு அரசாண்ட உன்னுடைய முன்னோர் பெருவீரர்களாக இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் மாய்ந்து மாண்டு போனார்கள். அது மட்டுமா? உன்னுடைய தாயாதித் தம்பியும் அத் தம்பி மகனுங் கூட முன்னமே இறந்து போனார்கள். ஆகவே சினத்தைவிட்டு, மறக்கள வேள்வி செய்யாமல், அறக்கள வேள்வி செய்க என்று கூறினான். இவ்வாறு கூறியவன் இளஞ்சேரல் இரும் பொறை இறந்து போன செய்தியையும் கூறினான்.

"சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து
மதுக்கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்