பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115

யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை


தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும் பொறைக்குப் பிறகு கொங்கு நாட்டையரசாண்டவன் அவனுடைய தம்பி மகனான இளஞ்சேரல் இரும்பொறை. (9-ஆம் பத்தின் தலைவன்). இளஞ்சேரல் இரும்பொறைக்குப் பின் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டை யரசாண்டான்.

மாந்தரன் சேரல் என்பது இவனுடைய பெயர். யானையின் கண்போன்ற கண்ணையுடையவன்.[1] ஆகையால் யானைக் கட்சேய் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். ‘வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்’ என்றும் இவன் கூறப்படுகிறான். வேழம்-யானை, நோக்கு பார்வை, சேய்-பிள்ளை, மகன். இவனுடைய பாட்டனான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு மாந்தரஞ் சேரல் என்னும் பெயரும் உண்டு. இவனுக்கும் மாந்தரஞ்சேரல் என்றும் பெயர் உண்டு. ஒரே பெயரைக் கொண்டிருந்த இவ்விருவரையும் பிரித்துக் காட்டுவதற்காக, ‘யானைக்கட்சேய்’ என்னும் அடைமொழி கொடுத்து இவன் கூறப்படுகிறான். யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை (யா. சே. மா. சே. இ.) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனாக இருக்க வேண்டும்


  1. * புறம் 22 : 29