பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121



கிள்ளிவளவன் கருவூரை வென்ற போதிலும் அதை அவன் ஆட்சி செய்யவில்லை. யா. க. சே. மாந்தரஞ் சேரல் இரும்பொறை அதை மீட்டுக் கொண்டிருக்க வேண்டும். கிள்ளிவளவன் கொங்கு நாட்டுக் கருவூரை முற்றுகை செய்திருந்த காலத்தில் பாண்டியன் த.கா.செ. வென்ற நெடுஞ் செழியன் சேரநாட்டு முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த படிமம் (தெய்வ உருவம்) ஒன்றை எடுத்துக் கொண்டு போனான் என்பது தெரிகின்றது. கிள்ளிவளவன் கருவூரை முற்றுகையிட்ட போது, யா.சே. மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு உதவி செய்யச் சேரன் தன்னுடைய சேனைகளைக் கொங்கு நாட்டுக்கு அனுப்பியிருக்கக்கூடும். அந்தச் சமயத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் முசிறியை முற்றுகை யிட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பாண்டியன் முசிறியை முற்றுகையிட்டு அங்கிருந்த படிமத்தைக் கொண்டு போன செய்தியைத் தாயங்கண்ணாரின் செய்யுளிலிருந்து அறிகிறோம்.[1] இந்தப் பாண்டியனின் காலத்தவரான நக்கீரரும் இவனுடைய முசிறிப் போரைக் கூறுகிறார்.[2]


முன்னோன் ஒருவன் இமயமலை யுச்சியில் பாறை யொன்றின் மேல் பொறித்து வைத்த வில்லின் அடையாளம். வானவன்-சேர அரசர்பரைக்குப் பொதுப் பெயர். வாடாவஞ்சி-வஞ்சி மாநகரமாகிய கருவூர்.


  1. * சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும், வளங்கெழு முசிறியார்ப் பெழ வளே இ, அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய, நெடுநல் யானை யடுபோர்ச் செழியன்” (அகம். 149:7-13)
  2. * கொய்சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன், முதுநீர் முன்னுறை முசிறி முற்றிக், களிறுபட வெருக்கிய கல்லென் ஞாட்பின் அரும்புண்ணுறுநர்”. (அகம் 57:14-17) கொ -8