பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131

நூற்றாண்டில் இருந்தவன் என்று எழுதினார்.[1] இதே காரணத்தைக் கூறி மு. இராகவையங்காரும், களவழி நாற்பது பாடிய பொய்கையாரும் முதல் திருவந்தாதி பாடிய பொய்கை யாழ்வாரும் ஒருவரே என்று எழுதினார். T. V. மகாலிங்கமும் தாம் ஆங்கிலத்தில் எழுதிய ‘தென்னிந்தியப் பழைய வரலாற்றில் காஞ்சீபுரம்’ என்னும் நூலில், இவர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக்கொண்டு, சோழன் செங்கணான் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கூறியதோடு அல்லாமல் அவன் சிம்மவிஷ்ணு பல்லவன் காலத்தில் இருந்தவன் என்றும் எழுதிவிட்டார்.[2] இவர்கள் இப்படி எழுதியிருப்பது ‘கங்காதரா மாண்டாயோ’ என்னும் கதை போலிருக்கிறதே தவிர உண்மையான சான்றும் சரியான ஆதாரமும் இல்லாத கருத்தாகும்.

பொய்கையார் என்னும் பெயர் பொய்கையூரில் பிறந்தவர் என்னும் காரணப் பெயர். பொய்கையூர்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்திருக்கலாம். குளப்பாக்கம் குளத்தூர், ஆற்றூர், ஆற்றுப்பாக்கம் என்னும் பெயர்கள் போல. வெவ்வேறு ஊரிலிருந்த பொய்கையார்களை ஒரே பொய்கை யார் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? களவழி பாடிய பொய்கையாரும், முதல் திருவந்தாதி பாடிய பொய்கையாரும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நாடுகளில் இருந்தவர்கள். களவழி நாற்பது பாடிய பொய்கையார் மேற்குக் கடற்கரையில் இருந்த தொண்டிப் பட்டினத்தில் சேரநாட்டில் கடைச் சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்தவர். முதல் திருவந்தாதி


  1. (P. 608-610 History of the Tamils, P.T. Srinivasa Iyengar. 1929)
  2. (P. 49, 38-59. Kanchipuram in Early South Indian History, T. V. Mahalingam, 1969)