பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

கஜபாகு) ஒருவன். முதலாம் கஜபாகு இலங்கையை கி. பி. 171 முதல் 191 வரையில் அரசாண்டான் என்று மகாவம்சம், தீபவம்சம் என்னும் நூல்களினால் அறிகிறோம். சரித்திரப் பேராசிரியர்கள் எல்லோரும் இந்தக் கால நிர்ணயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். (கஜபாகு, செங்குட்டு வனைவிட வயதில் இளையவன்). செங்குட்டுவன் பத்தினிக் கோட்ட விழா செய்தபோது அவனுடைய ஆட்சியாண்டு ஐம்பது. அவன் ஆட்சிக்கு வந்தபோது (இளவரசு ஏற்றபோது) அவன் இருபது வயதுடையவனாக இருந்தான் என்று கொள்வோமானால், அவனுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டில் அவனுக்கு வயது எழுபது இருக்கும். செங்குட்டுவன் தன்னுடைய ஐம்பதாவது ஆட்சியாண்டில் (அதாவது தன்னுடைய 70 ஆம் வயதில்) கண்ணகிக்குக் கோட்டம் அமைத்து விழா கொண்டாடினான்.[1]

கஜபாகு வேந்தன் தன்னுடைய எத்தனையாவது ஆட்சியாண்டில் பத்தினிக் கோட்டத்துக்கு வத்தான் என்பது தெரியவில்லை. அவனுடைய ஆட்சிக் காலத்தின் இடைப்பகுதியில் உத்தேசமாகக் கி. பி. 180-இல் கஜபாகு பத்தினிக் கோட்டத்துக்கு வந்தான் என்று கொள்ளலாம். அப்போது செங்குட்டுவனின் ஆட்சியாண்டு ஐம்பது. அவன் 55 ஆண்டு ஆட்சி செய்தான் என்று பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்துப் பதிகக் குறிப்பு கூறுகிறது. ஆகவே அவன் உத்தேசம் கி. பி. 185-ஆம் ஆண்டில் காலமானான் என்று கருதலாம். அதாவது சேரன் செங்குட்டுவன் உத்தேசமாக கி. பி. 130 முதல் 185 வரையில் அரசாண்டான் என்று நிர்ணயிக்கலாம். செங்குட்டுவனுடைய ஆட்சிக் காலத்தை உத்தேசமாக நிர்ணயித்துக் கொண்டபடியால், இதிலிருந்து கொங்கு


  1. “வையங் காவல் பூண்டநின் நல்யாண்டு. ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும், அறக்கள வேள்வி செய்யாதியாங்கணும், மறக்கள வேள்வி செய்வோ யாயினை.” (சிலம்பு, நடுகல். 129-132)