175
ஈட்டியது. அந்த யவன நாட்டுப் பழங்காசுகளில் சிறு அளவுதான் இப்போது அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள உரோம நாணயங்கள். இன்னும் புதையுண்டிருக்கிற உரோம நாணயங்கள் எவ்வளவென்று நமக்குத் தெரியாது.
கொங்கு நாட்டிலிருந்து யவண வணிகர் வாங்கிக் கொண்டு போன இன்னொரு பொருள் யானைத் தந்தம். கொங்கு நாட்டைச் சார்ந்த யானை மலைக் காடுகளிலும் ஏனைய காடுகளிலும் யானைக் கொம்புகள் கிடைத்தன. சேர நாட்டு மலைகளிலும் யானைக் கோடுகள் கிடைத்தன. யவன வாணிகர் யானைக் கோடுகளையும் வாங்கிச் சென்றார்கள். கொங்கு நாட்டுக் கொல்லி மலை ஓரிக்கு உரியது. கொல்லி மலையில் வாழ்ந்த குடிமக்கள், விளைச்சல் இல்லாமல் பசித்தபோது தாங்கள் சேமித்து வைத்திருந்த யானைக் கொம்புகளை விற்று உணவு உண்டார்கள் என்று கபிலர் கூறுகிறார்.[1]
சேரன் செங்குட்டுவன் வேனிற்காலத்தில் சேரநாட்டுப் பெரியாற்றுக் கரையின் சோலையில் தங்கியிருந்த போது அவனிடம் வந்த குன்றக் குறவர் பல பொருள்களைக் கையுறையாகக் கொண்டு வந்தனர். அப்பொருள்களில் யானைக் கொம்பும் அகிற் கட்டைகளும் இருந்தன.[2] சேர நாட்டு, கொங்கு நாட்டு மலைகளில் யானைக் கொம்புகள் கிடைத்தன என்பது இதனால் தெரிகிறது. யவனர் வாங்கிக் கொண்டு போன பொருள்களில் யானைக் கொம்பும் கூறப்படுகிறது.