பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

நம்பியும் நங்கையும் காதலரானார்கள். நங்கை நம்பியுடன் புறப்பட்டு அவனுடைய ஊருக்குப் போய் விட்டாள். அவள் போய் விட்டதையறிந்த செவிலித்தாய் அவளைத் தேடிப் பின் சென்றாள். அவர்கள் காணப்படவில்லை. தொடர்ந்து நெடுந்தூரஞ் சென்றாள். அவர்கள் காணப்பட வில்லை. ஆனால், துறவிகள் சிலர், அவ்வழியாக வந்தவர் எதிர்ப்பட்டனர். அவர்களை அவ்வன்னை நம்பியும் நங்கையும் போவதை வழியில் கண்டீர்களோ' என்று வினவினாள். அவர்கள், நங்கையின், அன்னை இவள் என்பதையறிந்னதர். அவர்கள் அன்னைக்குக் கூறினார்கள். ‘ஆம், கண்டோம். நீர் மனம் வருந்த வேண்டா. நங்கை நம்பியுடன் கூடி வாழ்வது தான் உலகியல் அறம். அந்த நங்கை நம்பிக்குப் பயன் படுவாளே தவிர உமக்குப் பயன்படாள். மலையில் வளர்ந்த சந்தன மரம் மலைக்குப் பயன்படாது. கடலில் உண்டாகும் முத்து கடலுக்குப் பயன்படாது. யாழில் உண்டாகிற இன்னிசை வாசிப்பவருக்கல்லாமல் யாழுக்குப் பயன்படாது. உம்முடைய மகளும் உமக்கு அப்படித்தான்’ என்று கூறி அன்னையின் கவலையைப் போக்கினார்கள் என்று பாலைபாடிய பெருங்கடுங்கோ உலகியல் அறத்தை அழகும் இனிமையும் உண்மையும் விளங்கக் கூறுகிறார். அவை:

"புலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே,

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென் செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே."