பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201


பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்து, இளஞ்சேரல் இரும் பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது. இதற்கு இவர் 32 ஆயிரம் காணமும் ஊரும் மனையும் நிலங்களும் பரிசாகப் பெற்றார் என்று பதிகச் செய்யுளின் அடிக்குறிப்பு கூறுகிறது.

பதிற்றுப் பத்தின் பத்தாம் பத்து இப்போது மறைந்து விட்டது. இது, சேரமான் (யானைக்கட்சேய்) மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது என்று கருதப்படுகிறது. இப்படிக் கருதுவதற்குக் காரணம் புறநானூறு 53 ஆம் செய்யுள். சேரமான் யானைக் கட்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை விளங்கில் என்னும் ஊரில் பகைவருடன் போர் செய்து வென்றான். அப்போது அவன் தன்னைப் பாடுவதற்கு இக்காலத்தில் கபிலர் இல்லையே என்று கவலையடைந்தான். (இவனுடைய பாட்டனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதனை 7ஆம் பத்தில் பாடிய கபிலர் முன் னமே இறந்து போனார் ) அரசன் கவலைப்படுவதை யறிந்த பொருந்தில் இளங்கீரனார் கபிலரைப் போன்று உம்மை நான் பாடுவேன் என்று கூறினார்.

“ செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
பாடுவல் மன்னாற் பகைவரைக் கடப்பே”

இவ்வாறு இந்தப் புலவர் பாடியிருக்கிற படியால் இவரே இவ்வரசன் மேல் பத்தாம் பத்துப் பாடியிருக்கலாம் என்று கருதுவது தவறாகாது.* (புறம். 53:11-15) கொ-13