பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203

அந்தப் போர் பலகாலம் நடந்து கடைசியில் பெருஞ்சேரலிரும்பொறை அதைக் கைப்பற்றினான் என்றும் கூறினோம். அந்தத் தகடூர்ப் போரைப் பற்றி ஒரு நூல் அக்காலத்திலேயே செய்யப்பட்டிருந்தது. அது சிலப்பதிகாரத்துக்கு முன்னரே இயற்றப்பட்ட நூல் என்பது ஆராய்ச்சியிலிருந்து தெரிகிறது. அதுதான் தகடூர் யாத்திரை என்னும் நூல்.

அக்காலத்தில் அரசர்கள் போர் செய்யும்போது புலவர்களும் போர்க்களத்துக்குச் சென்று எந்தெந்த வீரன் எந்தெந்த விதமாகப் போர் செய்கிறான் என்பதை நேரில் கண்டு அவர் களின் வீரத்தைப் புகழ்ந்து பாடுவது அக்காலத்து வழக்கமாக இருந்தது. தகடூர்ப் போரிலும் சில புலவர்கள் போர்க்களஞ் சென்று போர்ச் செயலைக் கண்டு பாடினார்கள். அவர்கள் பாடிய அந்தப் பாடல்களின் தொகுப்புதான் தகடூர் யாத்திரை என்னும் நூல். இப்போது நூல் முழுவதும் கிடைக்காதபடியால் அந்நூலில் எத்தெந்தப் புலவர்களின் செய்யுள்கள் இருந்தன என்பது இப்போது தெரியவில்லை. ஆனால், பொன்முடியார், அரிசில் கிழார் என்னும் புலவர்களின் செய்யுள்களும் அந்நூலில் இருந்தன என்பது திண்ணமாகத் தெரிகிறது.

சரித்திரச் செய்தியைக் கூறுகிற தகடூர் யாத்திரை இப்போது மறைந்துவிட்டது. அந்நூலின் சில செய்யுட்கள் மட்டுமே இப்போது கிடைத்துள்ளன. இந்நூல் சென்ற 19ஆம் நூற்றாண்டில், திருநெல்வேலி தெற்குப் புதுத் தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் வீட்டில் இருந்தது, பிறகு இந்தச் சுவடி மறைந்து போயிற்று. இதுபற்றி டாக்டர் உ. வே. சாமிநாதையர் ‘என் சரித்திரம்’ என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்.

“அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், “நாங்குனேரியிலிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர்