பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு, இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்’ என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை” பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்குமுறை ஏடு தேடிய போது தகடூர் யாத்திரை கிடைக்கவேயில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தை விட்டு யாத்திரை செய்து விட்டதைப் போல இந்த அருமையான நூலும் போய்விட்ட தென்றுதான் நினைக்கிறேன்.”

கொங்குநாட்டு அரசர்கள் இருவர் நடத்திய போரைக் கூறுவது தகடூர் யாத்திரை என்னும் நூல். இதில் அக்காலத்திலிருந்த புலவர்கள் இந்தப் போரைப் பற்றிப் பாடிய செய்யுட்கள் தொகுக்கப்பட்டிருந்தன. எனவே இந்த நூல் கொங்கு நாட்டில் உண்டான நூல்களில் ஒன்றாகும்.

இந்நூலைத் தொகுத்தவர் யார் தொகுப்பித்தவர் யார் என்பதும் தெரியவில்லை. நூலே மறைந்துவிட்டபோது இச்செய்திகளை எவ்வாறு அறிய முடியும்? “மறைந்துபோன தமிழ் நூல்கள்” என்னும் புத்தகத்தில், தகடூர் யாத்திரை, என்னுந் தலைப்பில் இந்நூலைப் பற்றிய ஏனைய விஷயங்களையறியலாம்.

ஐங்குறு நூறு

ஐங்குறு நூறு, எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவது தொகை நூல். அகவற் பாக்களினால் அமைந்த இந்நூல் மிகக்குறைந்த அடிகளைக் கொண்டது. மூன்று அடி சிற்றெல்லையையும் ஆறடி பேரெல்லையையுங் கொண்டது. ஐந்து அகப்பொருள் துறைகளைப் பற்றிக் கூறுகிறது. இக்காரணங்களினாலே இந்நூல் ஐங்குறு நூறு என்று பெயர் பெற்றுள்ளது. ஓரம் போகியார், அம்மூவனார், கபிலர், ஓதல் ஆந்தையார், பேயனார் என்னும் ஐந்து புலவர்கள் இந்நூற் செய்யுள்களைப் பாடியவர்கள்.