பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

211

அறிவதற்குத்தான் பழைய காலத்து நடுகற்களைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

கடைச் சங்க காலத்துக்கு முன்னே, பிராமி எழுத்து வருவதற்கு முன்பு, ஏதோ ஒரு வகையான எழுத்து தமிழ் நாட்டில் வழங்கியிருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. பிராமி எழுத்து வந்தபிறகு தமிழர் புதிய பிராமி எழுத்தை ஏற்றுக்கொள்ளாமல் பழைய எழுத்தையே வழங்கியிருக்க வேண்டும். அப்போது பௌத்த சமணர் பிராமியையும், மற்றத் தமிழர் பழைய தமிழ் எழுத்தையும் ஆக இரண்டெழுத்துக்களும் சில காலம் வழங்கியிருக்க வேண்டும். மிகப் பழைய காலத்தில் கால்டியா போன்ற தேசங்களில் சமய குருமார் எழுதிவந்த எழுத்து வேறாகவும் அதே சமயத்தில் பாமர மக்கள் எழுதி வந்த எழுத்து வேறாகவும் இருந்ததுபோல , கடைச் சங்க காலத் தமிழகத்திலும் (தொடக்க காலத்தில்) ஜைன பௌத்த மதத்தவர் வழங்கின பிராமி எழுத்து. வேறாகவும் மற்றவர் வழங்கின பழைய எழுத்து வேறாகவும் இருந்தன என்று தோன்றுகிறது. பௌத்த சமண மதங்கள் தமிழகத்தில் வேரூன்றிய பிறகு அவர்கள் பள்ளிக் கூடங்களைத் தங்கள் பள்ளிகளில் அமைத்துப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தபோது பிராமி எழுத்தைப் பிரசாரஞ் செய்தனர். பிராமி எழுத்து பிரசாரஞ் செய்யப்பட்ட பிறகு, பழைய தமிழ் எழுத்து பையப் பைய மறைந்து போயிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எந்தக் கருத்தானாலும் உண்மை தெரிய வேண்டுமானால், முன்பு கூறியதுபோல, பழைய நடுகற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். நூற்றுக் கணக்காக நடப்பட்ட சங்க காலத்து நடுகற்கள் பூமியில் புதைந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டு பிடித்தால் அவற்றில் எழுதப்பட்டுள்ள அக்காலத்து எழுத்தின் வரிவடிவம் நன்கு விளங்கும்.

இப்போது நமக்குத் தெரிந்திருக்கிறவரையில் பிராமி எழுத்தே தமிழகத்தில் வழங்கிவந்த பழைய எழுத்து