பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229

சாசனம், 346 ஆம் எண்ணுள்ள சாசனத்தோடு[1] தொடர்புடையது என்பதை இவர் அறியவில்லை.

இவர் காட்டியபடி முதல் வரியின் மூன்றாம் எழுத்து முறைதவறி எழுதப்பட்டிருக்கிறது. இவர் படிக்கிற நல்லி என்பது நள்ளி என்பதாகும். இந்த ல, ள வித்தியாசத்தை மேல் சாசனத்தில் விளக்கிக் கூறியுள்ளேன். முதல் வரியில் 6வது எழுத்தை இவர் பிராமி ஆ என்று வாசித்திருக்கிறார். இது பிராமி ப் என்னும் எழுத்து. அடுத்து வரும் பிடன் என்ப துடன் இவ்வெழுத்தைச் சேர்த்தால் “நள்ளி ஊர்ப்பிடன்” என்றாகிறது. பிடன் என்பது பிட்டன் ஆகும்.[2] மேல் சாசனத்தில் கூறப்படுகிற பிடந்தையும் இந்தப் பிடனும் (பிட்டன்) ஒருவரே என்பது தெளிவாகத் தெரிகிறது.

அடுத்து உள்ள ‘குறும்மகள்’ என்பதில் மகர ஒற்று மிகையாகக்காணப்படுகிறது. அது ‘குறுமகள்’ என்றிருக்க வேண்டும். இளம் பெண் என்னும் பொருளுடைய குறுமகள் என்னுஞ் சொல் சங்கச் செய்யுள்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம். ‘நோவல் குறுமகள்’ (அகம் 25:18), ‘ஒள்ளிழைக் குறுமகள்’ (நற். 253:5), ‘மேதையங் குறுமகள்’ (அகம் 7:6), ‘பொலந்தொடிக் குறுமகள்’ (அகம் 219:9), ‘வாணுதற் குறுமகள்’ (அகம் 230:5), ‘பெருந்தோட் குறுமகள்’ (நற், 221:8), ‘ஆயிழை குறுமகள்’ (அகம் 161:11), ‘மாண்புடைக் குறுமகள்’ (நற். 352:11), ‘மெல்லியற் குறுமகள்’ (நற். 93:8), ‘வாழியோ குறுமகள்’ (நற். 75:4), ‘மடமிகு குறுமகள்’ (நற். 319:8),


  1. (* 296 of 1963-64, 346 of 1927-26)
  2. பழங்காலத்தில் ட எழுத்து ட்ட என்று வாசிக்கப்பட்டது என்று தோன்றுகிறது. வட்டதளி என்பது வட தளி" என்று எழுதப்பட்டது காண்க.