பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

“காவேரியிந்த மா கோதாவரி வரமிர்ப நாடதா கன்னட தொள்
பாவிஸித ஜனபதம் வஸுதாவளய விலீன விஸத விஷய விஸேஷம்”

(கவிராஜ மார்க்கம். 1-36)

இதனால் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கன்னட நாட்டின் தென் எல்லை காவிரி ஆறு (மைசூர் நாட்டில் பாயும் காவிரி ஆறு) என்று தெளிவாகத் தெரிகின்றது. 9 ஆம் நூற்றாண்டிலே இது கன்னட நாட்டின் தென் எல்லையாக இருந்தது என்றால் அதற்கு முற்பட்ட சங்க காலத்தில் (கி. பி. 200-க்கு முன்பு) பழைய கன்னட நாட்டின் தென் எல்லை காவிரி ஆற்றுக்கு வடக்கே இருந்திருக்க வேண்டு மென்பதில் ஐயம் என்ன? கன்னடர், தமிழகமாக இருந்த வடகொங்கு நாட்டில் வந்து பரவியதும், பிற்காலத்தில் அந்தப் பகுதிகள் கன்னட மொழியாக மாறிப்போனதும் பிற்காலத்தில் (கி. பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு) ஏற்பட்டவையாகும். எனவே, நமது ஆராய்ச்சிக்குரிய கடைச்சங்க காலத்தில் கொங்கு நாடு, மைசூர் நாட்டுக் காவிரி ஆற்றுக்கு அப்பால் வடக்கே வெகுதூரம் பரவியிருந்தது என்பதும் அந்த எல்லைக்குள் இருந்த புன்னாடு பகுதியும் கொங்கு நாட்டில் அடங்கியிருந்தது என்பதும் நன்கு தெரிகின்றன.

கொங்கு நாடு நெய்தல் நிலமில்லாத (கடற்கரையில்லாத) உள்நாடு என்று கூறினோம். அங்கு மலைகள் அதிகம். எனவே அங்கே குறிஞ்சி நிலம் அதிகமாயிருந்தது. காடும் காட்டைச் சேர்ந்த முல்லை நிலங்களும் அதிகம். நெல் பயிரான மருத நிலங்களும் இருந்தன. கொங்கு நாட்டிலிருந்த