பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231


அறிஞர்கள் அறிவார்கள். உதாரணமாக இல்லாள்-இல்லான் என்னுஞ் சொற்களை எடுத்துக்கொள்வோம். இல்லாள் என்றால் வீட்டரசி, மனைவி, இல்லற வாழ்க்கையை நடத்து கிறவள் என்பது பொருள். இல்லாள் என்னுஞ் சொல்லுக்கு ஆண்பாற் சொல் கிடையாது. இல்லான் என்னுஞ் சொல் புருஷன், கணவன், இல்லறத்தை நடத்துகிறவன் என்னும் பொருள் உடையதன்று. மாறாக வறுமையாளன், தரித்திர முடையவன் என்பது பொருள். “இல்லானை இல்லாளும் வேண்டாள்” (நல்வழி-34) என்பது காண்க. இது போலவே, குறுமகள் என்பதற்குப் பொருள் வேறு, குறுமகன் என்பதற்குப் பொருள் வேறு. ஐ. மகாதேவன், இச்சாசனத்தில் வருகிற குறுமகள் என்பதைக் குறுமகன் என்று தவறாகப் படித்து அதற்கு எக்காலத்திலும் இல்லாத இளைய மகன் என்று பொருள் கூறியிருப்பது பொருந்தாது. இச் சாசனத்தில் உள்ள சொல் குறும்மகள் (குறுமகள்) என்பதே ஆகும்.

(முந்திய சாசனத்தில் கீரன் கொற்றன் கூறப்பட்டது போல இந்தச் சாசனத்தில் கீரன் கொற்றி கூறப்படுகிறாள். முன் சாசனத்தில் கூறப்பட்ட கீரன் கொற்றன் பிடந்தையின் மகனாக இருப்பது போலவே, இச் சாசனத்தில் கூறப்படுகிற கீரன் கொற்றியும் பிடன் (பிடந்தை) மகள் என்று கூறப்படு கிறாள். எனவே கீரன் கொற்றனும் கீரன் கொற்றியும் தமயன் தங்கையர் என்றும் இவர்கள் பிடன் (பிடந்தையின்) மக்கள் என்றும் தெரிகின்றனர். பிடனாகிய பிட்டன், 'கொற்றன், என்று கூறப்பட்டது போலவே இவர்களும் கீரன் கொற்றன், கீரன் கொற்றி என்று கூறப்படுவதும் இதனை வலியுறுத்துகிறது. இந்தச் சான்றுகளினாலே, புகழூர்க் குகையில் தமயனும் தங்கையுமான இவர்கள் இருவரும் சேர்ந்து முனிவர்களுக்கு இவ்விடத்தைத் தானஞ் செய்தார்களென்பது தெரிகின்றது. மேல் இரண்டு பிராமி எழுத்துகளைக் கொண்டு இக்குகையில் கற்படுக்கைகளைத் தானம் செய்தவர் பரம் பரையை இவ்வாறு அமைக்கலாம்..