பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

இரண்டாவது பிராமி எழுத்தின் படம் சிதைந்திருப்பதனால் அந்தப் படம் இங்குக் கொடுக்கப்படவில்லை.

இந்த இரண்டு சாசனக் கல்வெட்டுகளும் ஒரே பொருளைக் குறிக்கின்றன. அமணன் யாற்றூர் செங்காயபன் உறையகோ ஆதன் சே(ர)லிரும் பொறை மகன் பெருங்கடுங்கோன் மகனிளங்கடுங்கோ இளங்கோ ஆகஇருந்தபோது அறுத்த கல் என்பது இதன் பொருள்.

இடையில் எழுத்து மறைந்துபோன இரண்டாவது சாசனத்திலும் இதே செய்தி கூறப்படுகிறது. இரண்டு சாசனங்களின் கடைசி சொற்களில் மட்டும் சிறுவேறுபாடு காணப்படுகிறது. அது, முதல் சாசனத்தில் அறுத்த கல் என்றும், இரண்டாவது சாசனத்தில் அறுபித (அறுபித்த) கல் என்றும் காணப்படுகின்றன.

இவ்விரண்டிலும் முன்று அரசர்களின் பெயர்கள் கூறப் படுகின்றன. கோ ஆதன் சே(ர)லிரும் பொறையும் அவன் மகனான பெருங்கடுங்கோனும் அவன் மகனான இளங்கடுங் கோனும் கூறப்படுகின்றனர். பேரனான இளங்கடுங்கோன் இளவரசனாக இருந்தபோது அமண முனிவராகிய ஆற்றூர் செங்காயப்பன் என்பவர் (மலைக்குகையில் வசிப்பதற்கு அறுத்துக் கொடுத்த கல் (மலைக்குகை) என்று இச்சாசனங்கள் கூறுகின்றன.

சமண முனிவர்கள் மலைக்குகைகளில் வசித்துக் கற்பாறை களில் படுத்து உறங்குவது அக்காலத்து வழக்கம் என்று அறிவோம். அரச பரம்பரையைச் சேர்ந்த இளங்கடுங்கோ மலைக்குகையின் கற்றரையைச் செம்மையாக அமைத்து முனிவருக்குத் தானமாகக் கொடுத்தான் என்பது இதன் கருத்து.