239
இந்தச் சாசன எழுத்துக்களை ஐ. மகாதேவன் ஆராய்ந் திருக்கிறார்.[1] டி. வி. மகாலிங்கமும் ஆராய்ந்திருக்கிறார்.[2] ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.[3]
முதல் வரியில் முதல் எழுத்தாக இருப்பது தி. இது தா என்று வாசிக்கும்படியும் இருக்கிறது. ஐ. மகாதேவன் இதை தா என்று படித்து இதற்கு முன்பு இ என்னும் எழுத்தை இட்டு இதா என்று வாசிக்கிறார். இதா என்று வாசித்து 'இதோ' என்று பொருள் கூறுகிறார். ஆனால் இங்குக் காணப் படுவது தி என்னும் ஒரு எழுத்துதான். இதன் பொருள் திரு என்பது. இந்தச் சாசனம் எழுதப்பட்ட சமகாலத்தில் வெளியிடப்பட்ட சாதவாகன அரசர்களின் நாணயங்களில் பிராமி எழுத்துகள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் முதல் எழுத்து தி என்றும் சரி என்றும் எழுதப்பட்டுள்ளன. இது திரு (ஸ்ரீ) என்பதைக் குறிக்கின்றது என்பது இங்குக் கருதத்தக்கது. ஆகவே இச்சாசனத்தின் முதலில் உள்ள தி என்பது திரு என்னும் சொல்லாக இருக்கலாம். இதைவிட வேறு பொருள் கொள்வதற்கு இல்லை. 'இதோ' என்று கூறுவ தாக மகாதேவன் கருதுவது பொருத்தமாக இல்லை. அமணன் என்று இருக்க வேண்டிய சொல் அமண்ணன் என்று ணகர ஒற்று இடப்பட்டிருக்கிறது. இது கற்றச்சனின் தவறாக அல்லது எழுதியவரின் தவறாக இருக்கலாம். யாற்றூர், செங்காயபன் என்னும் சொற்களில் யாதொரு கருத்து வேறுபாடும் இல்லை.