பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


கொங்கு நாட்டிலே மற்ற இடங்களில் கிடைத்தது போலவே கொல்லி மலையிலும் விலையுயர்ந்த மணிகளும் கிடைத்தனவாம்.*[1]

கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் பேர் போன "கொல்லிப் பாவை" என்னும் உருவம் அழகாக அமைந்திருந்ததாம். பெண் வடிவமாக அமைந்திருந்த அந்தப் பாவை தெய்வத்தினால் அமைக்கப்பட்டதென்று கூறப்படுகிறது.**[2] இயற்கையாக அமைந்திருந்த அழகான அந்தக் கொல்லிப் பாவை, காற்றடித்தாலும் மழை பெய்தாலும் இடியிடித்தாலும் பூகம்பம் உண்டானாலும் எதற்கும் அழியாததாக இருந்தது என்று பரணர் கூறுகிறார்.***[3]

கொல்லி மலையில் கொல்லிப் பாவை இருந்ததைப் பிற்காலத்துக் கொங்கு மண்டலச் சதகமும் கூறுகிறது.

"தாணு முலகிற் கடன் முர சார்ப்பத் தரந்தரமாய்ப்
பூணு முலைமட வார்சேனை கொண்டு பொருது மலர்ப்
பாணன் முதலெவ ரானாலுங் கொல்லியம் பாவை முல்லை
வாணகை யாலுள் ளுருக்குவதுங் கொங்கு மண்டலமே"

____________________________

கொ -2

  1. *தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன், பன்மணிக் குவையெடும் விரை இக் கொண்பெனச், சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை, ஓங்கிருங் கொல்லிப் பொருநன்." (புறம்.152:28-31) “பகல்செலப், பல்கதிர் வாங்கிய படுசுடர் அமையத்துப் பெருமரங்கொன்ற கால்புகுவியன்புனத்து, எரிமருள் கதிர திருமணியிமைக்கும், வெல்போர்வானவன் கொல்லிக் குடவரை" (அகம்.213:111-15)
  2. **“கடவுள் எழுதிய பாவை', (அகம், 62:15) "தெய்வம் எழுதிய வினைமான் பாவை" (நற்.185:10)
  3. ***“செவ்வேர்ப் பலவின் பயங்கொழு கொல்லித் தெய்வங் காக்கும் தீதுநீர் நெடுங்கோட்டு அவ்வெள்ளருவிக் குடவரையகத்துக் கால் பொரு திடிப்பினும் கதழுறை கடுகினும், உருமுடன்றெறியினும் ஊறுபல தோன்றினும், பெருநிலங்கிளறினுந் திருநல வுருவின், மாயா இயற்கைப் பாவை.* (நற்றிணை. 201:5-11).