பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

 இப்படிப்பட்ட கொல்லிப் பாவை இப்போது என்ன வாயிற்று என்பது தெரியவில்லை. இப்போதுள்ள பொய்ம் மான் கரடு போன்று கொல்லிப் பாவையும் உருவெளித் தோற்றமாக இருந்திருக்கக் கூடும்.

கொல்லிமலை வட்டாரம் 'கொல்லிக்கூற்றம்' என்று பெயர் பெற்றிருந்தது. சங்கக்காலத்தில் கொல்லிக் கூற்றத்தையும் கொல்லி மலைகளையும் ஓரி என்னும் அரச பரம்பரையார் ஆட்சி செய்து வந்தார்கள். கடை எழுவள்ளல்களில் ஓரியும் ஒருவன். ஓரி அரசருக்கு உரியதாக இருந்த கொல்லிக் கூற்றத்தைப் பிற்காலத்தில் கொங்கு நாட்டுச் சேரர் கைப் பற்றிக் கொண்டு அரசாண்டனர். இந்த வரலாற்றை இந் நூலில் வேறு இடத்தில் காண்க.

திருச்செங்கோடு

கொங்கு நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள மலை இது. செங்கோட்டு மலையில் நெடுவேளாகிய முருகனுக்குத் தொன்று தொட்டுக் கோவில் உண்டு. அக் காலத்தில் முருகன் எழுந் தருளியிருந்த இடங்களில் செங்கோடும் ஒன்று என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.

“சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்” (குன்றக் குரவை)

என்று கூறுவது காண்க. பழைய அரும்பதவுரையாசிரியர், "செங்கோடு - திருச்செங்கோடு' என்று உரை எழுதியுள்ளார். மதுரையை விட்டு வெளிப்பட்ட கண்ணகியார் பதினான்கு நாள்களாக இரவும் பகலும் நடந்து சென்று "நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப், பூத்த வேங்கைப் பொங்காக்கீழ்”த் தங்கியபோது அவர் உயிர் பிரிந்தது என்று சிலப்பதிகாரம் ( கட்டுரை காதை. 190-191) கூறுகிறது. அந்த நெடுவேள் குன்றம் என்பது திருச்செங்கோடு மலை என்று பழைய