பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

(Mysore from inscriptions by B. Leuies - Rice. 1909.) புன்னாட்டின் வரலாறு இவ்வாறு முடிவடைகிறது.

எருமையூர் (எருமை நாடு)

எருமையூரையும் அதனை யரசாண்ட எருமையூரனையும் சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. இது வட கொங்கு நாட்டின் வட எல்லையில் இருந்தது. “நாரரி நறவின் எருமை யூரன்” என்றும் (அகம். 36: 17) “நேரா வன்றோள் வடுகர் பெருமகன், பேரிசை எருமை நன்னாடு” என்றும் (அகம். 253: 18-19) கூறுவது காண்க. எருமையூரன் குடநாட்டை (குடகு நாட்டை)யும் அரசாண்டான் என்பது “நுண்பூண் எருமை குடநாடு” (அகம். 115:5) என்பதனால் தெரிகின்றது. (எருமை-எருமையூரன்).

எருமை நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தது. “நேரா வன்றோள் வடுகர் பெருமகன், பேரிசை எருமை தன்னாட் டுள்ளதை, அயிரி -ஆறு” (அகம். 253: 18-20). “கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை, அயிரை யாற்றடைகரை வயிரின் நரலும் காடு” (அகம். 177: 10-11). இந்த அயிரி ஆறு, சேரநாட்டில் அயிரி மலையில் தோன்றுகிற அயிரி ஆறு (பெரியாறு) அன்று.

தலையாலங்கானம் என்னும் ஊரில் பாண்டியன் நெடுஞ் செழியனுடன் சோழனும் சேரனும் போர் செய்தபோது சோழ சேரர்களுக்குத் துணையாக இருந்த ஐந்து வேள் அரசர்களில் எருமையூரனும் ஒருவன் (அகம். 38: 13-20) எருமையூரன் வடுகர் பெருமிகன் என்று கூறப்படுகின்றான்.