43
தெண்கழிமிசைத் தீப்பூவின்
தண்தொண்டியோர் அடுபொருந”,
(புறம். 17: 9-13)
கடலை மேற்கு எல்லையாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையைக் கிழக்கு எல்லையாகவும் கொண்ட இந்த நாடு, தாழை (தென்னை) மரச் சோலைகளும் அகன்ற நெல் வயல்களும் கடற்கரை உப்புக் கழிகளும் உடையதாய் தொண்டித் துறைமுகத்தையும் உடையதாய் இருந்தது என்று இதனால் தெரிகின்றது.
மாந்தை
பூழிநாட்டில் மாந்தை என்னுத் துறைமுகப்பட்டினம் இருந்ததும், அது தொன்றுதொட்டுச் சேரருக்குரியதாக இருந்ததும் அறிந்தோம். துறைமுகப் பட்டினமாக இருந்தபடியால் அங்கு அயல் நாட்டுக் கப்பல் வாணிகர் வந்து வாணிகம் செய்தார்கள். அதனால் சேரர்களுக்குச் சுங்க வருவாய் கிடைத்தது. இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் மாந்தைப் பட்டினத்தில் பொன் முதலான பெருஞ் செல்வத்தைப் புதைத்து வைத்திருந்தான் என்று மாமூலனார் கூறுகிறார்.
“வலம்படு முரசிற் சேரல் ஆதன்
முந்நீர் ஒட்டிக் கடம்பறுத் திமயத்து
முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்றவன்
நிலந் தினத் துறந்த நிதியம்.”
(அகம். 127: 3-10)
மாந்தைப் பட்டினம் மரந்தை என்றுங் கூறப்பட்டது.
“குரங்குளைப் புரவிக் குட்டுவன்
மரந்தை யன்ன என் நலம்”
(அகம். 376: 17-18)