பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

தகடூரை, அதிகமான் அரசர், பரம்பரை பரம்பரையாக அரசாண்டார்கள், சங்க காலத்தில் அரசாண்ட தகடூர் அதிக மான்களில் மூவர் பெயர் மட்டும் தெரிகின்றது. அதிகமான் அரசர்களின் முன்னோன் ஒருவன் தேவலோகத்திலிருந்து கரும்பைக் கொண்டு வந்து கொங்கு நாட்டில் பயிராக்கினான் என்று ஔவையார் கூறுகிறார்.[1] தேவலோகத்திலிருந்து கரும்பு கொண்டு வந்தான் என்பது மிகைப்படக் கூறலாகும். வேறு ஊர் எங்கிருந்தோ அவன் கரும்பைக் கொண்டு வந்து பயிராக்கினான் என்பதே சரியாகும்.

அதிகமான் அரசர்களில் முதன் முதலாக அறியப்படுகிறவன் நெடுமிடல் அஞ்சி என்பவன், சேர நாட்டு அரசனான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் (சேரன் செங்குட்டுவனுடைய தமயன்) நெடுமிடல் அஞ்சியை ஒரு போரில் வென்றான் என்று பதிற்றுப் பத்துச் செய்யுள் கூறுகிறது.[2]

இதில் கூறப்படுகிற நெடுமிடல் என்பது அதிகமான் அரசர்களில் ஒருவனுடைய பெயர் என்று பழைய உரையாசிரியர் கூறுகிறார். “நெடுமிடல்-அஞ்சி இயற் பெயராம்” என்று உரையாசிரியர் தெளிவாகக் கூறுவது காண்க. பரணர், தம்முடைய செய்யுள் ஒன்றில் நெடுமிடலைக் கூறுகிறார். பதிற்றுப் பத்து கூறுகிற நெடுமிடல் அஞ்சியே இந்த நெடு மிடல் என்பதில் ஐயமில்லை. இந்த நெடுமிடல் பசும்பூண் பாண்டியனுடைய நண்பனாகவும் சேனைத் தலைவனாவும் இருந்தான். பசும்பூண் பாண்டியனுடைய பகைவர்கள் சிலர்,


  1. “அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், அரும்பெறல் மரபில் கரும்பு இவண் தந்தும், நீரக விருக்கை யாழி சூட்டிய, தொன்னிலே மரபின் முன்னோர்.” (புறம். 99:1-4). ‘அந்தரத்து அரும்பெறல் அமிழ் தம் அன்ன, கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே.’ (புறம். 392: 19-21)
  2. நெடுமிடல் சாயக்கொடுமிடல் துரியப், பெருமலே யானையொடு புலங்கெட இறுத்து". (4ஆம் பத்து, 2-10-1)