பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

அதிகமான் நெடுமிடல் அஞ்சிக்குப் பிறகு தகடூர் நாட்டுக்கு அரசனானவன் அதிகமான் நெடுமான் அஞ்சி என்பவன். அதிகமான் நெடுமான் அஞ்சி ஔவையாரை ஆதரித்தவன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஔவையார் இவனுடைய வீரத்தையும் வெற்றிகளையும் பாடியுள்ளார் (புறம். 87, 88, 89, 90, 91,92, 93, 94, 95, 97, 98, 315, 390). இவன் ஏழு அரசர்களோடு போர் செய்து வென்றதை ஒளவையார் கூறுகிறார்.[1] இவன், மலையமான் திருமுடிக்காரியின் கோவலூரின் மேல் படையெடுத்துச் சென்று போரில் வென்றான் என்றும் அந்த வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடினார் என்றும் ஔவையார் கூறுகின்றார். இவனுடைய வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடிய செய்யுள் இப்போது கிடைக்கவில்லை. கோவலூர்ப் போரை இவன் வென்றானேயல்லாமல் கோவலூரை இவன் பிடிக்கவில்லை.

அதிகமான் நெடுமான் அஞ்சி வேறு சில போர்களில் வெற்றி பெற்றான் என்று ஔவையார் கூறுகிறார். “கடிமதில் அரண்பல கடந்த நெடுமான் அஞ்சி”(புறம். 92:5-6) இந்தப் போர்கள் யாருடன் எங்கு நடந்தன என்பதும் தெரியவில்லை.

உண்டவரை நெடுங்காலம் வாழச் செய்கிற கிடைத்ததற்கரிய கருநெல்லிக்கனி அதிகமான் நெடுமான் அஞ்சிக்குக் கிடைத்தது. அக்கனியை அவன் தான் உண்ணாமல் பெரும் புலவராகிய ஔவையாருக்குக் கொடுத்தான். அவர் அதை உண்ட பிறகுதான் அது கிடைத்தற்கரிய கருநெல்லிக்கனி

  1. “செருவேட்டு, இமிழ் குரல் முரசின் எழுவரோடு முரணிச் சென்றமர் கடந்த நின் ஆற்றல் தோன்றிய அன்றும் பாடற்கரியை” (புறம், 99:8-11)
    “இன்றும், பரணன் பாடினன் மற்கோல் மற்றுநீ. முரண்மிகு கோவலூர் நூறிதின், அரணடு திகிரியேந்திய தோளே” (புறம். 99:11-14)