பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V

அரசாண்டனர் என்று தவறாகக் கருதிக்கொண்டு அவ்வாறே சரித்திரம் எழுதியுள்ளனர். அவர் கூற்று தவறானது. ஒரே குலத்தைச் சேர்ந்த மூத்த வழி இளைய வழியினராக இருந்தாலும், சேரநாட்டையாண்ட சேர அரசர் வேறு, கொங்கு நாட்டையரசாண்ட பொறைய அரசர் வேறு.

கொங்கு நாட்டு வரலாற்றின் சரித்திரக் காலம், இப்போது கிடைத்துள்ள வரையில், ஏறத்தாழக் கி. பி. முதல் நூற்றாண்டில் தொடங்குகிறது. கி. பி. முதல் நூற்றாண்டில் தொடங்குகிற கொங்கு நாட்டுச் சரித்திரம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் (ஏறத்தாழ கி. பி. 250 இல்) முடிகிறது. அதாவது தமிழ்நாடு களப்பிர அரசருக்குக் கீழடங்கியபோது கொங்கு நாட்டுச் சரித்திரத்தின் பழைய வரலாறு முடிவடைகிறது.

ஒரு நாட்டின் வரலாறு எழுதுவதற்கு நல்ல சான்றுகளாக இருப்பவை ஆர்க்கியாலஜி (பழம்பொருள் அகழ்வாராய்ச்சி). எபிகிராபி (சாசன எழுத்துகள்) (நூமிஸ்மாட்டிக்ஸ் பழங்காசுகள்), இலக்கியச் சான்றுகள் முதலானவை. கொங்கு நாட்டுப் பழைய சரித்திரம் எழுதுவதற்கு இந்தச் சான்றுகளில், இலக்கியச் சான்றுகளைத் தவிர, ஏனைய சான்றுகள் மிகமிகக் குறைவாக உள்ளன.

அகழ்வாராய்ச்சி (ஆர்க்கியாலஜி) கொங்கு நாட்டில் தொடங்கவில்லை என்றே கூறவேண்டும். தமிழ் நாட்டின் ஏனைய மண்டலங்களில் ஆர்க்கியாலஜி முறையாகவும் தொடர்ந்தும் முழுமையுமாகச் செயற்படாமலிருப்பது போலவே, கொங்கு மண்டலத்திலும் ஆர்க்கியாலஜி அதிகமாகச் செயற்படவில்லை. ஆகவே ஆர்க்கியாலஜி சான்றுகள் நமக்குப் போதுமான அளவு கிடைக்கவில்லை.

எபிகிராபி (பழைய சாசன எழுத்துச் சான்று) ஓரளவு கிடைத்துள்ளன. அவை பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கிறபடியால் நம்முடைய கொங்கு நாட்டுப் பழைய சரிந்திரத்துக்கு ஓரளவு உதவியாக இருக்கின்றன. பிராமி எழுத்துச் சாசனங்கள், கொங்கு நாட்டில் உள்ளவை, முழுமையும் இன்னுங் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன.