பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஓரி என்னும் பெயருள்ள குதிரைமேல் அமர்ந்து செல்வான். இவனும் இவனுடைய கொல்லி நாட்டுக்கு அடுத்திருந்த தகடூர் அரசனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும் நண்பர்களாக இருந்தார்கள்.

முள்ளூர் மன்னனாகிய மலையமான் திருமுடிக்காரி, கொல்லிமலை ஓரியுடன் போர் செய்தான். காரி, தன்னுடைய காரி என்னும் குதிரைமேல் அமர்ந்தும் ஓரி தன்னுடைய ஓரி என்னுங் குதிரைமேல் அமர்ந்தும் போர் செய்தார்கள்.[1] போரில் ஓரி இறந்துபோக, காரி ஓரியின் ஊரில் வெற்றியோடு புகுந்தான்.[2] ஓரியின் கொல்லி நாட்டை வென்ற காரி அந்நாட்டைத் தன்னுடைய அரசனாகிய பெருஞ்சேரலிரும் பொறைக்குக் கொடுத்தான்.[3] ஓரி அரசர், பரம்பரையாக ஆண்டு வந்த கொல்லி நாடு பெருஞ்சேரல் இரும்பொறைக் காலத்தில், சேரரின் கொங்கு இராச்சியத்தில் சேர்ந்துவிட்டது.


கழுவுள்

கொங்கு நாட்டுக் காமூரில் வாழ்ந்த இடையர்களின் தலைவன் கழுவுள். காமூரைச் சூழ்ந்து பலமான கோட்டை மதிலும் அகழியும் இருந்தன. இவனுக்கு முன்பு காமூரை யரசாண்ட இவனுடைய பரம்பரையரசர் இன்னாரென்று தெரியவில்லை. கொங்குச் சேரர் தங்களுடைய கொங்கு இராச்சியத்தை விரிவாக்கினபோது, செருஞ்சேரல் இரும் பொறை கழுவுள்மேல் படையெடுத்துச் சென்று போர்


  1. காரிக்குதிரை காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை ஓரியும் 'சிறுபாண் 110-111)
  2. “ஓரிக் கொன்ற ஒரு பெருந்தெருவில், காரீபுக்க நேரார் புலம் போல், கல்லென்றால் ஊரே”. (நற். 320-4-7)
  3. “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காசி, செல்லா நல்விசை நிறுத்த விலயில், ஓரிக்கொன்று சேரலர்க்கீத்த, செல்வோப் பலவின் பயங்கொழு கொல்லி” (அகம். 209:12.15)