பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

புலவரிடம் கொடுத்துத், தன்னுடைய தலையை வெட்டிக் கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் அவன் பெரும்பொருள் கொடுப்பான் என்று கூறினார். புலவர் வாளைக் கையில் வாங்கிக் கொண்டு, நேரே இளங் குமணனிடம் வந்து வாளைக் காட்டிக் குமணன் வாள் கொடுத்த செய்தியைக் கூறினார். (புறம். 165). பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

முதிரமலைக் குமணனும் குதிரைமலைக் குமணனும் வெவ்வேறு ஆட்கள் போலத் தோன்றினாலும் இருவரும் ஒருவரே. முதிர மலைக்குக் குதிரைமலை என்றும் பெயர்,

நள்ளி

கண்டிரம் என்னும் நாட்டை யரசாண்ட மன்னர்கள் கண்டிரக்கோ என்று பெயர் பெற்றிருந்தார்கள். அவர்களில் நள்ளி என்பவன் ஒருவன். இவனைக் கண்டிரக்கோ பெரு நள்ளி என்பர். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவனைக் ‘கண்டிரக்கோ பெருநள்ளி என்பர். தேர்(வண்டி)களையும் யானைகளையும் பரிசிலர்களுக்குக் கொடுத்துப் புகழ் படைத்திருந்தான். நள்ளி, ஊரில் இல்லாத போது இரவலர் அவனுடைய மாளிகைக்கு வந்தால் அவனுடைய மகளிர் அவர்களுக்கு யானைக் கன்றுகளைப் பரிசாக அளித்தார்கள்.[1] நள்ளியின் கொடைச்சிறப்பைச் சிறுபாணாற்றுப் படையும் கூறுகிறது. பெருஞ் சித்திரனாரும் இவனுடைய வள்ளன்மையைக் கூறுகிறார்.*[2]

வன்பரணர் என்னும் புலவர் நள்ளியின் தோட்டிமலைக் காடுகளின் வழியே பயணஞ் செய்தபோது பசியினால் சோர்ந்து ஒரு பலா மரத்தின் அடியில் உட்கார்ந்து விட்டார். அருகில் வார் இல்லாத காடாகையால் உணவு கிடைக்க


  1. (புறம். 151: 1-7)
  2. (அடி 104-107) (புறம். 158: 13-16)