பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

வருமான பரணர் இப்பெயரைத் தம்முடைய செய்யுளில் கூறுகிறார். அகநானூறு 142ஆம் செய்யுளில் இப் புலவர் இவ்வரசனை ‘மாந்தரம் பொறையன் கடுங்கோ’ என்று கூறுகிறார். சிலப்பதிகாரக் காவியத்திலும் இவன் மாந்தரம் பொறையன்[1] என்று கூறப்படுகிறான். இவ்வரசனுடைய பேரனான இளஞ்சேரல் இரும்பொறையை “மாந்தரன் மருகன்” (மாந்தரனுடைய பரம்பரையில் வந்தவன்) என்று பெருங்குன்றூர் கிழார் கூறுகிறார்.

போர் செய்வதில் திறலுடைய வீரன் இவன் என்றும் அது பற்றியே இவன் கடுங்கோ என்னும் சிறப்புப் பெயர் பெற்றான் என்றும் அறிகிறோம். ஆனால் இவன் செய்த போர்களின் விபரந் தெரியவில்லை. சேர அரசர் பரம்பரையில் இளைய வழியைச் சேர்ந்த பொறையர், கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாக வென்றனர். இவன் தந்தையாகிய அந்துவன் பொறையன் ‘மடியா உள்ளத்து மாற்றோர்ப் பிணித்த’ வன் என்று கூறப்படுகிறான். அவனைத் தொடர்ந்து கொங்கு இராச்சியத்தை விரிவுபடுத்திய இவ்வரசனும் கொங்கு நாட்டிலிருந்த பல சிற்றரசர்களுடன் போர் செய்து அவர்களுடைய நாட்டைக் கைப்பற்றியிருக்க வேண்டும். இவ் வரசன் மேல் ஏழாம் பத்துப் பாடிய கபிலர் இவ்வரசனைப் போர்க்களத்திலே பாசறையில் சந்தித்தார். போர்க்களங்களிலே இவனுடைய உடம்பில் பல வெட்டுக் காயங்கள் பட்டிருந்தன என்றும் அந்த விழுப்புண் தழும்புகளை இவன் சந்தனம் பூசி மறைத்திருந்தான் என்றும் கபிலர் கூறுகிறார். [2]ஆனால், எந்தெந்தப் போர்க்களத்தில் எந்தெந்த அரசனுடன் இவன் போர் செய்தான் என்பது


  1. கட்டுரை காதை, அடி 84
  2. ('எஃகா டூனங் கடுப்ப மெய் சிதைந்து, சாந்தெழில் மறைத்த சான்றோர் பெருமகன்', 7 ஆம் பத்து 7:17-18)