பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


கூற்றமென்றது, கொல்லி மலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினை, நீர்கூர் மீமிசை யென்றது அந்நாட்டு நீர் மிக்க மலையின் உச்சியை.”

தகடூர்ப் போர்

கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றின பிறகு பெருஞ்சேரலிரும் பொறை தகடூர் அதிகமான்மேல் படையெடுத்துச் சென்று தகடூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். அப்பொழுது பாண்டியனும் சோழனும் அதிகமானுக்கு உதவியாக சேனைகளை உதவினார்கள். தகடூர்ப் போர் நிலைச் செருவாகப் பலகாலம் நடந்தது. பெருஞ்சேரலிரும் பொறைக்கு அவனைச் சேர்ந்த சிற்றரசர் பலர் துணை நின்றார்கள். கொல்லி நாட்டை வென்ற மலையமான் திருமுடிக்காரி இந்தப் போரிலும் பெருஞ்சேரலிரும் பொறையின் பக்கம் இருந்து போர் செய்தான், தகடூர்க் கோட்டை பலம் பொருந்தியதாக இருந்தபடியாலும் அதன் அரசனாகிய அதிகமான் நெடுமான் அஞ்சியும் அவன் மகனான பொருட்டெழினியும் போரில் புறங்கொடா வீரர்களாக இருந்தபடியாலும் அதை எளிதில் வெள்ள முடியவில்லை. அதிகமானுடைய சேனைத் தலைவன் பெரும்பாக்கன் என்பவன், தகடூர்ப் போர்க்களத்தை நேரில் கண்ட புலவர்கள் அரிசில்கிழார், பொன்முடியார் முதலியவர்கள். கடைசியில் தகடூரைப் பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான். அந்த வெற்றியை அரிசில் கிழார் அவன் மேல் எட்டாம் பத்துப் பாடிச் சிறப்பித்தார்.[1]


  1. * "பல்பயன் நிலை இய கடறுடை வைப்பின், வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும், வில்பயில் இரும்பில் தகடூர் நூறி”. (8 ஆம் பத்து 8:7-9) " பல்வேல தானை யதிக மானோடு, இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று, முரசுங் குடையுங் கலனுங் கொண்டு, உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத், துகள் தீர் மகளிர் இரங்கத் துப்பறுத்துத், தகடூர் எறிந்து நொச்சி தந்தெய்திய, அருந்திறல் ஒள்ளிசைப் பெருஞ் சேரலிரும் பொறை”, (8 ஆம் பத்து, பதிகம்)