பக்கம்:கொடி முல்லை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கொடிமுல்லை


மருண்டெழுந்தான்; தலைமாட்டில் இருந்த குத்து
வாளெடுத்தான் நொடிப்பொழுதில்; தன்மேல் வீழ்ந்த
சுருண்டகுழல் இளங்கொடியைக் கண்டான்; கைவாள்
தொலைவினிலே வீசிவிட்டான்; குனிந்து தூக்கி
'மருண்டாயோ? அஞ்சாதே!’ என்றான். அந்த
வல்லிதலை குனிந்து நின்றாள்; கடைக்க ணித்தாள்.
கருவிழிகள் ஒன்றையொன்று தாவி தாவிக்
கவ்வுகின்ற வேளையிலே அல்லி வந்தாள்.

'மன்னிக்க வேண்டு'மென்றாள் எங்கோ பார்த்துக்
கொடிமுல்லை; மழைபட்ட மதியை ஒத்தாள்!
'மன்னிப்புக் குரியவன்நான்' என்றான் அந்த
வழிப்போக்கன். அல்லிஇடை மறித்துச் சொல்வாள்;
'மன்னிப்புக் கார்பொறுப்பு? தடுத்த இந்த
மரவேரே' எனச்சிரித்தாள். இல்லை! இல்லை!
என்னுடைய குற்றமிரண்'டென்றான் ஏந்தல்.
'ஈதென்ன புதுமையடி’ என்றாள் அல்லி.

எழுந்திருந்தான்; தோற்பையை எடுத்தான்; 'ஊருக்(கு)
எப்பக்கம் நலம்பாடி இல்லம்?' என்றான்;
செழுந்தேனாம் கொடிமுல்லை விழியைப் பார்த்தான்;
செயல்மறந்தான். 'எவ்வூரோ?' என்றாள் அல்லி.
'எழுகடலார் தென்னிலங்கை அழகன் என்பேர்;
இவ்வூரில் கலைக்கோயில் சமைக்க வேந்தன்
எழுதிடநான் இங்குவந்தேன்’ என்றான் தச்சன்.
'இப்படிப் போய்த் திரும்புங்கள்’ என்றாள் அல்லி.

அடிபட்டுக் கால் முறிந்த மானைப் போல்
அவளவனைப் பார்த்திருந்தாள். ஊரை நோக்கி
நடக்கின்றான் கற்றச்சன் தலையைத் தாழ்த்தி;
'நான்மாட்டேன்’ என்றுமணம் அவளைத் தாவும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/12&oldid=1252852" இலிருந்து மீள்விக்கப்பட்டது